``தி.மு.க. ஒரு தீயசக்தி... அதை அரசியலிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கினார்; அந்த தி.மு.க.வை பன்னீர்செல்வம் புகழ்ந்து பேசுகிறார். அவருடைய மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு வந்து, அவரது செயல்பாடுகளின் சிறப்பைப் பற்றிப் பேசுகிறார். இவை எல்லாம் கட்சி விரோத நடவடிக்கைகள்’’ எனக் கூறி அ.தி.மு.க.விலிருந்து பன்னீர் செல்வத்தையும், அவருக்குத் துணையாக இருந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது!
ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வையும் கலைஞரையும் புகழ்ந்து பேசியதால் அவரையும் சட்டமன்ற உறுப்பினர்களாக விளங்கும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கிய பழனிச்சாமி கூட்டம், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தை ஏன் நீக்கவில்லை?
பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு அவரது ஆட்சியைப் பாராட்டிப் பேசியது தவறு - என்று பேசினீர்களே; அறிக்கைகள் வெளியிட்டீர்களே ; பன்னீர் செல்வத்தின் மீதான குற்றச்சாட்டுக்களில், அவரது மகன் முதலமைச்சரைப் பாராட்டிப் பேசியதும் ஒன்றல்லவா?
அப்படி இருக்க ரவீந்திரநாத் மீது ஏன் நடவடிக்கையில்லை? அவரை ஏன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவில்லை? பழனிச்சாமி கூட்டம் பதிலளிக்குமா?