சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், விடுமுறை எடுக்காத போக்குவரத்து ஊழியர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். இதையடுத்து அமைச்சர் சிவங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணம் திட்டம் பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கடந்த ஓராண்டில் தமிழ்நாடு முழுவதும் 132 கோடி இலவச பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டத்தால் போக்குவரத்துக் கழகத்துக்கு இழப்பு ஏதும் இல்லை.
மலைப்பாதைகளில் செல்லும் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து மலைப்பகுதிகளுக்கும் பெண்கள் பேருந்தில் இலவசமாகச் செல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
புதிய பேருந்துகள் வாங்க ஜெர்மன் வங்கியில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் விதமாக அதிகளவிலான அரசுப்பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கும் மலைக் கிராமங்களுக்கும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்துக் கழகங்களுக்குக் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என தெரிவித்துள்ளார்.