தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஞாயிறுக்கிழமை) நாமக்கல், தேசிய நெடுஞ்சாலை, பொம்மகுட்டையில் ‘நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் மாவட்ட செயலாளர்கள், மாநில அமைச்சர்கள், தி.மு.க நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பின்னர் , தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா த்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் தலைப்பில் பேசிய அவர், "முதலில் கூட்டாட்சிக்கு ஒப்புக்கொண்ட நேரு , பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.மாநில சுயாட்சிக்கு உருவத்தை கொடுத்தவர் அண்ணா. 1974-ம் ஆண்டு மாநிலங்களுக்கு சுயாட்சி கொடுக்கிற தீர்மானத்தை கலைஞர் சட்டமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டுவந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பினார்.
இதை பெற்றுக் கொண்ட இந்திரா காந்தி இதுபற்றி முழுமையாக ஆராய்வோம் என்று கடிதம் எழுதினார். ஆக மாநில சுயாட்சிக்கு கரு பேரறிஞர் அண்ணா என்றால் அந்த கருவை உருவமாக மாற்றியவர் கலைஞர். 1974 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்த உருவத்துக்கு இன்றுவரை உயிரில்லை.
தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு தி.மு.க மாநில சுயாட்சிக்கு கோரிக்கைக்கு வந்துவிட்டது. ஆனால் தந்தை பெரியார் சாகும்வரை தனித் தமிழ்நாடு கேட்டார் . பெரியார் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கூட, ‘ இந்தியாவில் இருக்கும் வரை இந்துமதம் என்னை சூத்திரனாகவே வைத்திருக்கும். இந்தியாவில் இருக்கும் வரை இந்துமதம் என்ன பஞ்சமனாகவே வைத்திருக்கும்.
அதுமட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் வரை தமிழனுக்கு பொருளாதார வளர்ச்சி வராது. உத்தியோகத்திலே பங்கு கிடைக்காது. எனவே நான் முடிவு செய்துவிட்டேன். இன்றைக்கு திமுக ஆட்சியிலே இருக்கிறது. அவர்கள் மாநில சுயாட்சி என்று தங்களை சுருக்கிக் கொண்டார்கள். ஆனால் இளைஞர்களே சுதந்திர தமிழ்நாடு கேளுங்கள்’ என்று எழுதியுள்ளார்.
பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக தந்தையையை ஒதுக்கி 'இந்தியா வாழ்க' என்று சொன்னோம்.
நான் பிரதமரிடமும் அமித் ஷாவிடமும் பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்" எனக் கூறினார். ஆ.ராசாவின் இந்த கருத்து இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.