திருவள்ளூர் மாவட்டம், செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமமாலினி. இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். ஹேமமாலினிக்கு நாகதோஷம் இருப்பதாகவும், அவருக்குப் பரிகார பூஜை செய்தால் தோஷம் தீரும் எனவும் அக்கம்பக்கத்தினர் ஹேமமாலினியின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர். மேலும் பூண்டி அடுத்துள்ள வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரமத்திற்கு ஹேமமாலினியை அழைத்து சென்றால் பரிகாரம் நிறைவேறும் எனவும் சிலர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக ஹேமமாலினியின் தந்தை கடந்த 13-ம் தேதி அவரை அந்த ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த ஆசிரம சாமியார் முனுசாமி ஹேமமாலினி இரவு முழுவதும் இங்கு தங்கி பூஜை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் ஹேமமாலினி தனது உறவினர்களுடன் அங்கு தங்கியுள்ளார்.
அதைத் தொடர்ந்து நள்ளிரவு பூஜை முடிந்ததும் தனது வீட்டுக்கு வந்த ஹேமமாலினி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஹேமமாலினி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹேமமாலினியின் உறவினர்கள் அவரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், சிபிசிஐடியினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் வெளிவந்துள்ளது.
கடந்த 13-ம் தேதி நள்ளிரவு பூஜைக்காக ஆசிரமம் சென்ற ஹேமமாலினியை சாமியார் முனுசாமி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஹேமமாலினி தனது வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.இதைத் தொடர்ந்து சாமியார் முனுசாமியை கைது செய்த போலிஸார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.