44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் வரும் ஜூலை மாதம் 28-ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் ஏறத்தாழ 187 நாடுகளிலிருந்து 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துவதற்கு சர்வதேச அளவிலான கூடுதல் அரங்கம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இந்த போட்டியை சிறப்பாக நடத்திட அரசின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை குறித்து ஆய்வு செய்து, சர்வதேச ஒலிம்பியாட் போட்டியை நடத்திட 19 குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சுடர் ஓட்டம் டெல்லியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த சுடர் ஓட்டமானது டெல்லியில் தொடங்கி 25 முக்கிய நாடுகளுக்கு சென்று, இறுதியாக தமிழ்நாட்டுக்கு வரும் பட்சத்தில், ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.
இந்த சர்வதேச அரங்கம் ஆனது 700 விளையாட்டு வீரர்கள் ஒரே சமயத்தில் விளையாடும் வகையில் அமைக்கப்பட்டவுள்ளது. கொரோனா பரவல் அதிகமாகும் பட்சத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.