மதுரை - போடிநாயக்கனூர் இடையே உள்ள 90.4 கிலோ மீட்டர் தூரம் உள்ள மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் வகையில், அகல ரயில் பாதை திட்டம் 450 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றது.
இதில் மதுரையிலிருந்து தேனி வரை உள்ள 75 கி.மீ தூரத்தில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று பல்வேறு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ரயில்வே பாதுகாப்பு ஆணையர்களின் அனைத்து கட்ட ஆய்வு பணிகளும் முடிவடைந்தது.
இதையடுத்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதுரை-தேனி ரயில் மே 27ம் தேதியிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு மாவட்ட மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், மதுரை-தேனி இடையே ரயிலை இயக்குவது பெரும் சவாலாக இருப்பதாக மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "மதுரை - தேனி புதிய ரயில் பாதையில் காலை, மாலை என இரு நேரத்தில் மட்டுமே ரயில் இயக்கப்படுகின்றது.
ரயில் பாதையைப் பொதுமக்கள் பயன்படுத்தத் தடை இருந்தும், ஆபத்தை உணராமல் ரயில் வரும்போது கூட்டமாகத் தண்டவாளத்தைக் கடக்கின்றனர். மேலும் செல்ஃபி எடுக்கின்றனர். இதனால் ரயில் ஓட்டுநர்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது.
இதனால் ஒவ்வொரு நாளும் இப்பாதையில் ரயிலை ஓட்டுவது பெரும் சவாலாகவே உள்ளது. எனவே ரயில் தண்டவாளம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.