சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தது. அதனை விசாரிக்க அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இன்றும், நாளையும் விசாரிக்கும் என முன்னதாக கூறப்பட்டது.
இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நேற்று அவர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினர். இதையடுத்து இன்று அறநிலையத்துறை குழுவினர் இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு செய்தனர். அப்போது மீண்டும் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகிகளுக்கும் கருத்து வேறுபாடு இருக்க கூடாது. நீதிமன்றமே சிதம்பரம் நடராசர் கோவில் பொது கோவில் என்று தெரிவித்துள்ளது.
உரிய சட்ட திட்டத்தின் படி தான் ஆய்வு செய்யப்படுகிறது. தீட்சிதர்கள் பாரபட்சமின்றி விளக்கம் அளிப்பது தான் சட்டப்படியாக இருக்கும். இந்து சமய அறநிலையத்துறை கோவிலை எடுத்துக்கொள்வது குறிக்கோள் அல்ல. தீட்சிதர்கள் செயலுக்கு உரிய சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை ஆதினம் அரசியல்வாதி போல் பேசுவதை இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்காது. ஆதீனங்களுக்கு அரசு ஆதரவாக இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க மதுரை ஆதீனம் முயற்சி செய்கிறார். மதுரை ஆதீனம் தொடர்ந்து இது போல் பேசினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.