பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கடந்த மே மாதம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, இஸ்லாமிய மதத்தையும், முகமது நபியை பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார். அதேபோல், நவீன் ஜிந்தால் என்ற பா.ஜ.க நிர்வாகியும், நபிகள் குறித்து சர்ச்சை கருத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இவர்களின் இக்கருத்திற்கு இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் அல்லாமல் கத்தார், ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, ஓமன் போன்ற நாடுகளில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தது. இதனால் உடனே நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிந்தால் ஆகிய இருவரையும் கட்சியிலிருந்து பா.ஜ.க நீக்கம் செய்துள்ளது.
மேலும், முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசியது தொடர்பாக பா.ஜ.க தலைவர்களைக் கண்டித்து சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஈரான் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது. அதேபோல், இந்தியா மன்னிப்பு கேட்கவேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. மேலும் அரபுநாடுகளில் இந்தியப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரமும் வலுவடைந்து வருகிறது.
பா.ஜ.க தலைவர்களின் இந்த மத வெறுப்பு பேச்சால் இந்தியாவிற்கு தலைகுனிவடைய செய்துள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் விமர்சித்துள்ளனர். உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்புகள் வலுவடைந்து வருவதால் ஒன்றிய பா.ஜ.க அரசு எண்ணச்செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது.
இந்நிலையில் நபிகள் நாயகத்தின் முழு வரலாற்றையும் படித்தால் முழு மனிதர்களாக மாறலாம் என பா.ஜ.கவினருக்கு தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், "பெரியார்,அம்பேத்கர், காமராசர், கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் நபிகள் நாயகத்தின் முழு வரலாற்றைப் படித்தவர்கள். நபிகள் நாயகத்தின் முழு வரலாற்றைப் படித்தால் பா.ஜ.க-வினர் முழு மனிதனாக மாற முடியும். மீண்டும் இதுபோல நபிகள் நாயகத்தைப் பற்றி விமர்சனம் செய்தால், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் எதிர்ப்போம்" என தெரிவித்துள்ளார்.