தமிழ்நாடு

“சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கட்டுப்பாட்டில் எடுக்க திட்டமா?” : அமைச்சர் சேகர் பாபு விளக்கம் !

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து அறநிலைத்துறை அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என மயிலாடுதுறையில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

“சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கட்டுப்பாட்டில் எடுக்க திட்டமா?” : அமைச்சர் சேகர் பாபு விளக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்திற்கு இன்று காலை சென்ற இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்த அமைச்சர், ஆதீனத்தின் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து ஆதீன மடத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீகுருஞானசம்பந்தர் அருள் நிலையம் என்ற விருந்தினர் மாளிகையை அமைச்சர் மற்றும் ஆதீன குருமகா சந்நிதானம் திறந்து வைத்தனர். பின்னர் தருமையாதீனம் சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியில் ஒரு பகுதியாக ஆதீன வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த அமைச்சர் சேகர்பாபு, அங்குள்ள தேவார திருமுறை பாடசாலையை பார்வையிட்டு மாணவர்களுடன் உரையாடினார். ஆதீனம் சார்பில் அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை ஆதீன மடாதிபதி மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறும்போது, சைவத்துடன், தமிழை வளர்க்கும் பணியில் தொன்மையான ஆதீனங்கள் ஈடுபட்டுள்ளன, ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பை தமிழக அரசு வழங்கும். அவற்றின் பாரம்பரியங்களில் தமிழக அரசும் இந்து அறநிலையத் துறையும், தலையிடாது என்று கூறினார்.

மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மற்றபடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை, தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான திருக்கடையூர் கோயில் மிகச்சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது.

இதுபோன்ற கோயில்களில் இந்து சமய அறநிலையத்தறை தலையிடவே தலையிடாது. பொதுக்கோயில்களில் ஏதேனும் பிரச்னைகள், முறைகேடுகள் ஏற்பட்டால் அதில் தலையிடும் உரிமை அறநிலையத்துறைக்கு உண்டு. இது தீட்சிதர்கள், நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை அல்ல. சிதம்பரம் ஆலயத்தில் பக்தர்கள் தெரிவித்த புகாரின்படி விருப்பு வெறுப்பு இன்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நியாயத்தின்படியே அறநிலையத்துறை செயல்படும். ஆதீனத்தின் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கணக்குவழக்கு பார்ப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான் என்று தெரிவித்தார். திருவாரூரில் இடிந்து விழுந்த பழைமையான மண்டபத்தை சீரமைக்கும் பணி இன்று துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories