தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் டி.கே.எஸ்.இளங்கோவன், நவநீத கிருஷ்ணன், ஆர்.எஸ்.பாரதி, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூன் 29ல் நிறைவடைந்தது. இதையடுத்து காலியாக உள்ள இந்த 6 இடத்திற்கும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் தி.மு.க வேட்பாளராகத் தஞ்சை சு. கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா. கிரிராஜன் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். மேலும் தி.மு.க ஆதரவுடன் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்தார். அதேபோல் அ.தி.மு.க சார்பில் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறும் நேரம் இன்று 3 மணியுடன் முடிவடைந்ததை அடுத்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாகச் சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். அதன்படி, தி.மு.க. வேட்பாளர்கள் சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு கழக தொண்டர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.