நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் முருகன். இவர் நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், "ட்விட்டரில் தமிழ்நாடு பாரதியஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் பக்கத்தை பின்தொடர்கிறேன். நேற்று அண்ணாமலை மோடியை வாழ்த்தி வெளியிட்ட பதிவில் இந்தியாவின் வளர்ச்சியை குறிப்பிடும்விதமாக from a pariah to viswa guru என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
pariah (பறையா) என்றால் உலக அளவில் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட அல்லது கீழானவர்கள் என பல பொருள் தரும்படி சொல்லப்படுகிறது. இந்தியாவில் தீண்டத்தகாதவர்கள், இழிவானவர்கள் என்று குறிக்கும் அண்ணாமலை இதுபோன்று குறிப்பிட்ட சாதியை இழிவுப்படுத்தும் விதமாக பதிவு வெளியிடுகிறார். எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஊடகத்தினரை தரக்குறைவாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சை ஓய்வதற்குள் ட்விட்டரில் பிரதமரை வாழ்த்தி அவர் போட்ட பதிவு மற்றொரு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.