டெல்டா மாவட்டங்களில் இரண்டு நாட்கள் கால்வாய் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.5.2022) திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது வருமாறு:-
கடந்த இரண்டு நாட்களாக காவிரி பாயக்கூடிய டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். எதற்காக இந்த சுற்றுப்பயணம் என்றால், நீர் ஆதாரப் பணிகளைப் பார்வையிட்டு, அதைத் துரிதப்படுத்த வேண்டும், முறைப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன். இந்தப் பயணத்தைப் பொறுத்தவரைக்கும் மகிழ்ச்சியாக, மனநிறைவு தரக்கூடிய வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. அதையொட்டி, உங்களைச் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, இதே திருச்சியில் ஒரு மாநில மாநாடு போல் நடைபெற்ற ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு ஏழு உறுதிமொழிகளை அறிவித்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
1. வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழ்நாடு!
2. மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி!
3. குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்!
4. அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்!
5. எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்!
6. உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்!
7. அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்!
இந்த ஏழு பிரகடனத்தை நான் அந்தக் கூட்டத்தில் அறிவித்தேன்.
கடந்த ஓரு வருட காலத்தில் நம்முடைய தமிழக அரசு முன்னெடுத்திருக்கக்கூடிய திட்டங்கள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் யாரும் மறுக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். அந்த வகையில் 'மகசூல் பெருக்கம் - மகிழும் விவசாயி' என்ற வாக்குறுதி அது எப்படி நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை பார்ப்பதற்காக தான் இரண்டு நாட்களாக டெல்டா பகுதியில் ஒரு மின்னல் வேக சுற்றுப் பயணத்தை நடத்தி முடித்துவிட்டு வந்திருக்கிறேன். கடந்த ஆண்டே மகசூல் பெருகிவிட்டது. அதில் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
•காவிரி டெல்டா பாசனம் மாவட்டங்களாக இருக்கக்கூடிய தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் வழக்கமாக 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.
•கடந்த ஆண்டு, இந்த மாவட்டங்களை கடைமடை வரைக்கும் தண்ணீர் தங்குதடையின்றி செல்லக் கூடிய வகையில் ரூபாய் 65 கோடியில் 4061 கிலோ மீட்டர் தூரத்திற்கு அனைத்து நீர்வழித் தடங்களையும் தூர்வாரக்கூடிய வகையில் 647 பணிகளை செயல்படுத்தினோம்.
•அதனுடைய உரிய நாளாக இருக்கக்கூடிய ஜூன் 12ஆம் தேதி அன்று, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
•ரூபாய் 61 கோடியே 9 இலட்சத்திற்கு குறுவை தொகுப்புத் திட்டமும் செயல்படுத்தப்பட்டது.
•இதன் காரணமாக கடந்த ஆண்டு குறுவையில் 4 இலட்சத்து 90 ஆயிரம் ஏக்கரும், சம்பாவில் 13 இலட்சத்து 34 ஆயிரம் ஏக்கரும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி பயிர் சாகுபடி மற்றும் உணவு உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டது.
இதே சாதனையை, இந்த ஆண்டும் தொடர்ந்து ஏற்படுத்துவதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டோம். இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பே, டெல்டா மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,964 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வார்வதற்கான 683 பணிகளை விரைவாக முடிக்க நான் உத்தரவிட்டிருந்தேன்.
இதன்படி, முதற்கட்டமாக, வருவாய்த்துறையின் ஒத்துழைப்போடு அனைத்து நீர்நிலைகளின் எல்லைகளும் அளக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் எல்லாம் அகற்றப்பட்டு, இந்தப் பணிகள் அனைத்தும் ஏப்ரல் 23-ஆம் நாள் தொடங்கப்பட்டது. தொடங்கியவுடன், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு அந்தப் பணியை அவர்களும் மேற்கொண்டார்கள். 865 கனரக இயந்திரங்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தப் பணி இன்றுடன் முழுமையடைந்து நீர்வழிப்பாதைகள் தூர்வாரக்கூடிய பணிகளை மிகச் சிறப்பாக முடித்திருக்கிறோம்.
1580 கிலோ மீட்டர் நீளமுள்ள சி மற்றும் டி வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பணிகளும் விரைவில் முடிக்கப்பட இருக்கிறது.
•கரூர் மாவட்டத்தில், ரூபாய் 2 கோடியே 85 இலட்சத்தில் 19 பணிகளும்,
•திருச்சி மாவட்டத்தில் ரூபாய் 18 கோடியே 75 இலட்சத்தில் 90 பணிகளும்,
•பெரம்பலூர் மாவட்டத்தில் ரூபாய் 2 கோடியே 48 இலட்சத்தில் 40 பணிகளும்,
•அரியலூர் மாவட்டத்தில் ரூபாய் ஒரு கோடியில் 16 பணிகளும்,
•புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கோடியே 10 இலட்சத்தில் 20 பணிகளும்,
•தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 21 கோடியில் 170 பணிகளும்,
•திருவாரூர் மாவட்டத்தில் ரூபாய் 12 கோடியில் 115 பணிகளும்,
•நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூபாய் 3 கோடியே 46 லட்சத்தில் 30 பணிகளும்,
•மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூபாய் 8 கோடியே 70 இலட்சத்தில் 49 பணிகளும்,
•கடலூர் மாவட்டத்தில் ரூபாய் 8 கோடியே 50 இலட்சத்தில் 134 பணிகளும்,
என மொத்தம் 4,418 கிலோமீட்டர் தூரத்திற்கு முடிக்கப்பட்டிருக்கிறது.
குறுவை சாகுபடிக்கு வழக்கமாக, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்படக்கூடிய நாள் என்பது ஜூன் 12-ம் தேதி, எல்லோருக்கும் தெரியும். ஆனால் 12 ஆம் தேதிக்கு முன்பே, அதாவது மே மாதம் 24ஆம் தேதியே நீர் திறந்து விடப்பட்டதும் உங்களுக்குத் தெரியும். சுதந்திர இந்தியாவில், மே மாதத்தில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்ட வரலாறு இதுவரையில் கிடையாது. இது தான் முதல் முறை. இந்த வரலாற்றுச் சாதனையானது இந்த ஆண்டிற்கு தான் நிகழ்ந்திருக்கிறது.
இதனால், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு விட குறுவையில் 5.20 இலட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 இலட்சம் ஏக்கரும் என சாகுபடி பரப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளும் முன்கூட்டியே துவக்கப்படுவதால், வடகிழக்கு பருவமழை காலத்தில், சம்பா பயிர்கள் வெள்ளநீரில் மூழ்காமல் காக்கப்படும். மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால், கோடைப் பயிர் வகைகளையும் அதிக அளவில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படும். இன்றைய தேதியில் ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 352 ஏக்கர் அளவில் குறுவை சாகுபடியில் நெல் பயிரிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டினுடைய நிதிநிலைமைப் பற்றி உங்களுக்கே தெரியும். ஆனாலும், உழவர் பெருமக்களுக்கான உதவிகளை செய்வதில் என்றைக்கும் திமுக அரசு பின் வாங்கியது கிடையாது.
•வேளாண் பெருமக்களின் நலன் கருதி, இந்த ஆண்டும் ரூபாய் 61 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்பு வழங்கக்கூடிய திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை உங்கள் மூலமாக உழவர் பெருமக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தத் திட்டத்தின் மூலம் 3 லட்சம் உழவர்கள் பயன்பெறுவார்கள்.
•வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தோடு, 1்இலட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு யூரியா, டிஏபி, பொட்டாஷ் ஆகிய உரங்கள் அடங்கிய தொகுப்பு 47 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் முழு மானிய விலையில் வழங்கப்படும்.
•வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 2,400 மெட்ரிக் டன் நெல் விதைகள் 50 விழுக்காடு மானியத்தில் 4 கோடியே 20 இலட்சம் ரூபாயில் வழங்கப்படும்.
•வேளாண் பொறியியல் துறை மூலம் டிராக்டர் உள்ளிட்ட 237 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் 50 விழுக்காடு மானியத்தில் ரூபாய்
6 கோடியே 6 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும். இதன் மூலமாக, கடந்த ஆண்டு சாதனையானது இந்த ஆண்டும் தொடரப் போகிறது. அதைவிடக் கூடுதல் பயனை அடைவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. முன்கூட்டியே திறந்து விடப்பட்டுள்ள காவிரி நீரை முறையாகப் பயன்படுத்தியும், தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தும் பல்வேறு உழவர் நலத்திட்டங்களையும் பயன்படுத்தியும், நெல் உற்பத்தியில் புதியதொரு சாதனையை இந்த ஆண்டும் டெல்டா உழவர்கள் படைக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் வேண்டி, விரும்பி நான் கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் நடந்த பணிகள் அந்தப் பணிகள் பற்றிய வீடியோ தொகுப்பு ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதை இப்போது உங்கள் முன்னால் காண்பிக்கிறோம், அதையும் பாருங்கள்.
கேள்வி: தோட்டக்கலை பயிர்களுக்கு இவ்வளவு திட்டம் என்று அறிவித்திருக்கிறீர்கள். அதில் பட்டியலின விவசாயிகளுக்கு மட்டும் 100 சதவீதம் மானியத்தில் கொடுப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். அதில் அனைத்து விவசாயிகளையும் உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது?
வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் பதில்: ஆதிதிராவிட மக்களுக்கு 100 சதவீதம் கொடுத்திருக்கிறோம். இது பிற்காலத்தில் விரிவாக்கம் செய்யப்படும்.
கேள்வி: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று எதிர்கட்சித் தலைவர் தொடர்ந்து குற்றம் சாட்டிக் கொண்டே வந்திருக்கிறார். உங்களுடைய பார்வையில் இந்த ஓர் ஆண்டில் எப்படி இருக்கிறது?
முதலமைச்சர் பதில்: நானும் ஒரு ஆள் இருக்கிறேன் என்று மக்களுக்கு சொல்வதற்காக ஒவ்வொரு நாளும் எதையாவது சொல்லிக் கொண்டு இருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு கலவரம், சாதி, மத சண்டைகள், துப்பாக்கிச் சூடுகள், கூட்டு வன்முறைகள், போன்ற எந்த சம்பவமும் நடக்காத ஒரு ஆட்சியாக இன்று நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் தமிழ்நாட்டில் இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால், சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கின்றது என்ற காரணத்தினாலேதான், முதலீடுகளும் தேடி வரக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. எனவே, தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருப்பதற்கு இது ஒரு சாட்சி. இது தான் என்னுடைய பதில்.
கேள்வி : அரசு ஊழியர்கள் 27,000 பேர்கள் இன்றைக்கு ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இன்னும் அடுத்தடுத்த மாதங்களில் ஆயிரக்காணவர்கள் ஓய்வு பெறப் போகிறார்கள். அவர்களுக்கு பணப் பலன்கள் கிடைக்குமா? 58 வயதிலிருந்து 60 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏதாவது குறைப்பதற்கு வழி இருக்கிறதா?
முதலமைச்சர் பதில்: அதைப்பற்றி எல்லாம் கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம். முடிந்த பிறகு உங்களுக்கு விளக்கமாகச் சொல்கிறோம்.
கேள்வி: அரசினுடைய முக்கியமான விஷயங்கள் எல்லாம் எப்படி அண்ணமலைக்குப் போகிறது?
முதலமைச்சர் பதில்: அண்ணாமலை அரசியல் செய்கிறார். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம். அவ்வளவு தான் வித்தியாசம்.