தமிழ்நாடு

“உரிமையோடு வந்திருக்கிறேன்..” : விழாவில் மாணவிகளிடம் அனுமதி வாங்கிவிட்டு திருச்சி கிளம்பிய முதல்வர்!

நமது அரசைப் போலவே, இந்தக் கல்லூரியும் பெண்களின் கல்வி உரிமைக்காக அர்ப்பணிப்போடு பாடுபட்டு வருவது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியதாக அமைந்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“உரிமையோடு வந்திருக்கிறேன்..” : விழாவில் மாணவிகளிடம் அனுமதி வாங்கிவிட்டு திருச்சி கிளம்பிய முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை, நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரியில் (SIET) நடைபெற்ற விழாவில், அக்கல்லூரிக்கு தேசிய தர நிர்ணயக் குழுவால் வழங்கப்பட்ட NAAC-A++ சான்றிதழை அக்கல்லூரியின் தலைவர் மூஸா ரஸா அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி, சிறந்த பேராசிரியர்கள், சிறந்த மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரிக்கு வந்திருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கக்கூடிய இந்த அமைப்பினுடைய நிர்வாகிகளுக்கு நான் முதலில் என்னுடைய நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இந்த ஓராண்டு காலத்தில், மூன்று கல்லூரிகளில் நடைபெறக்கூடிய விழாக்களில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அந்த மூன்று கல்லூரிகள் எந்த கல்லூரிகள் என்று சொன்னால், பெண்கள் படிக்கக்கூடிய கல்லூரிகள் தான். அதுவும் இந்த ஒரு வார காலத்திற்குள்ளாக இராணி மேரிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டேன். அடுத்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்றிருக்கக்கூடிய விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். இன்று இந்த SIET கல்லூரியில் நடைபெறக்கூடிய இந்த விழாவிலே பங்கேற்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரைக்கும், தேசிய தர நிர்ணயக் குழுவால் A++ தகுதி பெற்றமைக்காக நடைபெறக்கூடிய பாராட்டு விழா என்றுதான் அழைப்பிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது, அதைச் சொல்லித்தான் என்னிடத்தில் தேதியும் பெற்றார்கள். இங்கு இந்தக் கல்லூரிக்கு மட்டும் அல்ல, எனக்கும் சேர்த்து ஒரு பாராட்டு விழாவை நீங்கள் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

இது தென்னிந்திய கல்வி அறக்கட்டளை (Southern Indian Educational Institution- SIET)-இன்கீழ் ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே, சென்னை மாநகரில் இந்தக் கல்லூரியை, S.I.E.T கல்லூரி என்றுதான் பாமர மக்கள் கூட அழைப்பார்கள். அந்த அளவிற்கு அடிமட்ட மக்களிடத்தில் பிரபலமான கல்லூரியாக இந்தக் கல்லூரி விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கல்லூரிக்கு நான் வருவது என்பது புதிதல்ல. ஒவ்வொரு முறையும் ஜனநாயகத் திருவிழாவாக இருக்கக்கூடிய தேர்தல் நடைபெறக்கூடிய நேரத்தில் நான் இங்குதான் வருவேன்.

இந்தக் கல்லூரிக்கு முன்புறம் இருக்கக்கூடிய அடுத்த தெருவில்தான் என்னுடைய வீடும் இருக்கிறது. இங்கே வந்து வாக்களித்துதான் என்னுடைய ஜனநாயகக் கடமையை நான் ஆற்றியிருக்கிறேன், தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறேன் என்று சொன்னால், அந்த வெற்றிக்கான வாக்கைச் செலுத்திய இடத்தில்தான் இன்று வந்து உங்களை எல்லாம் நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

“உரிமையோடு வந்திருக்கிறேன்..” : விழாவில் மாணவிகளிடம் அனுமதி வாங்கிவிட்டு திருச்சி கிளம்பிய முதல்வர்!

சென்னையில் ஆண்களுக்கு நிறைய கல்லூரிகள் இருந்தாலும், பெண்களுக்கு என்று தனியாக ஒரு கல்லூரி வேண்டும் என்ற மன உறுதியோடு இந்தக் கல்லூரியை ஆரம்பித்தவர் தான் நீதிபதி பஷீர் அகமது அவர்கள். 1955-இல் அன்றைய பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களை அழைத்து அடிக்கல் நாட்டி, உருவாக்கிய கல்லூரி இந்தக் கல்லூரி. நேரு பெருமகனார் ஆரம்பித்த இந்தக் கல்லூரியில் ஒரு லட்சம் மாணவிகள் படித்து, பட்டம் பெற்று வெளியேறி இருக்கிறார்கள்.

இந்த மாநிலத்துக்காக மட்டுமல்ல, இந்த நாட்டுக்காக மட்டுமல்ல, அவர்கள் அதிகாரிகளாக, நிர்வாகிகளாக ஒவ்வொரு பகுதியிலும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கல்லூரிக்கு தேசிய தர நிர்ணயக் குழுவால், A++ கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்லூரியின் வெற்றிப் பாதையில் இது மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்திருக்கிறது.

இந்தச் சிறப்பானது, மறைந்த நீதிபதி பஷீர் அகமது அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு மாபெரும் வெற்றியாக அமைந்திருக்கிறது. இந்தக் கல்லூரியின் தற்போதைய தலைவராக இருக்கும் 'மூஸா ரஸா' அவர்கள், தாளாளராக இருக்ககக்கூடிய மறைந்த நீதிபதி பஷீர் அகமது அவர்களின் மகன் பைசூர் ரகுமான் சையது அவர்களுக்கும், இந்தக் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்கள், பயிலும் மாணவியர்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கக்கூடிய ஒரு வெற்றியாக அமைந்திருக்கிறது.

மூஸா ரஸா அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக, ஒன்றிய அரசின் செயலாளராக இருந்தவர். நல்ல கவிஞரும், எழுத்தாளரும் கூட என்று இங்கு நம்முடைய பர்வீன் சுல்தானா அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார். இந்தக் கல்லூரி விழாவில் பங்கேற்க வேண்டும் என்று பர்வீன் சுல்தானா என்னை உரிமையோடு அழைத்திருக்கிறார்கள். நானும் தட்டாமல் வந்திருக்கிறேன். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. நான் எப்போது அவரை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், அவரும் தட்டாமல் நான் சொல்லக்கூடிய எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவர் வந்திருக்கிறார்.

ஏறக்குறைய 22 ஆண்டுகளாக இங்கே பணியாற்றி, இன்றைக்கு தமிழ்த் துறையின் பேராசிரியையாக இருக்கக்கூடிய அவரது அழைப்பினை ஏற்று மட்டுமல்ல, உங்களுக்குப் பக்கத்துத் தெருவில் வசிப்பவன் என்ற உரிமையோடும் இந்த விழாவில் நான் பங்கேற்க வந்திருக்கிறேன்.

அதேபோல, இந்தக் கல்லூரி நிர்வாகத்தில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி முனிர் ஹோடா அவர்கள் இருக்கிறார். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி அவர்கள் இருக்கிறார். நீதிபதி பஷீர் அகமது அவர்கள் பெண்களுக்காக தனியாக கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உறுதியாக இருந்து உருவாக்கியிருக்கக்கூடிய கல்லூரி.

1955-இல், 173 மாணவிகளுடன் துவங்கப்பட்ட இந்தக் கல்லூரி, இன்றைக்கு 7,500 மாணவிகள் இந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 50 விழுக்காடு பேர் இஸ்லாமிய மாணவியர்கள்; மீதியுள்ள 50 விழுக்காட்டினர் அனைத்து மதங்களையும் சார்ந்திருக்கக்கூடிய மாணவியர்கள். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவியர்கள் இங்கே அதிக அளவில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில், மதச்சார்பின்மையின் மறு உருவமாக இந்தக் கல்லூரி திகழ்ந்து கொண்டிருப்பது என்பது மிகச் சிறப்பு, தனிச் சிறப்பாக அமைந்திருக்கிறது.

“உரிமையோடு வந்திருக்கிறேன்..” : விழாவில் மாணவிகளிடம் அனுமதி வாங்கிவிட்டு திருச்சி கிளம்பிய முதல்வர்!

இந்த விழாவிற்கு வருவதற்கு முன்னால், இந்தக் கல்லூரியின் இணையத்தளத்தைப் பார்த்தேன். அதில் கூறப்பட்டுள்ள இந்தக் கல்லூரியின் “Vision”, "Mission" என்னவென்றால், “மதச்சார்பின்மையைப் போற்றும் வகையில், சாதி-மதப் பாரபட்சமின்றி, உயர்ந்த, தரமான கல்வியை பெண்களுக்கு அளிப்பதுதான்.” சமூகத்தில் ஒவ்வொருவரும் உயர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் இங்கே கல்வி போதிக்கப்படும்” என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே இந்தக் கல்லூரி, அனைத்துப் பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபடும் கல்லூரி.

கல்வியுரிமைதான் பெண்ணுரிமையின் கண் போன்றது. அதனால்தான் “திறன்மிக்க கல்லூரி மாணவ, மாணவிகளை” உருவாக்க “நான் முதல்வன்” திட்டத்தை அறிவித்து, அதை இன்றைக்கு நம்முடைய அரசு எப்படியெல்லாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சிப்பொறுப்பில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை, பல்வேறு சாதனைகளை இன்றைக்கும் வரலாற்றிலே பேசக்கூடிய அளவிற்கு அவைகளெல்லாம் விளங்கிக் கொண்டிருக்கின்றன. இங்கே நம்முடைய உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் பொன்முடி அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம், இப்போது 50 சதவீதம், கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வுத் திட்டம், ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக பெண்களைத் தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்கிற சட்டம், இப்படி பல திட்டங்களைச் சொல்ல முடியும்.

ஆகவே, பெண்கள் தன்னம்பிக்கையொடு வாழ வேண்டும் என்பதற்காகத் தான் சுய உதவிக் குழு என்ற மாபெரும் திட்டத்தை கலைஞர் அவர்கள் 1989ஆம் ஆண்டு கொண்டுவந்து நிறைவேற்றித் தந்தார்கள். அதே வழி நின்று, பெண்களுக்கு கல்லூரிக் கல்வி வழங்கியே தீரவேண்டும் என்ற நோக்கத்தில் தான், அரசுப் பள்ளிகளில் படித்து, கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கக்கூடிய, பெண்கள் கல்வி நிதியுதவி திட்டத்தை அறிவித்து அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

நமது அரசைப் போலவே, இந்தக் கல்லூரியும் பெண்களின் கல்வி உரிமைக்காக அர்ப்பணிப்போடு பாடுபட்டு வருவது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியதாக அமைந்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியோடு உங்கள் அனைவரையும் பாராட்டி, வாழ்த்துகிறேன், நன்றி தெரிவிக்கிறேன்.

உங்களுடைய ஆர்வத்தை, உங்களுடைய உற்சாகத்தைப் பார்க்கிறபோது, நீண்ட நேரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து நானும் பங்கேற்க வேண்டும், நீண்ட நேரம் உங்களுடன் அளாவிட வேண்டும் என்று ஆசை எனக்கு உண்டு. ஆனால் உடனடியாக நான் விமானத்தைப் பிடித்து திருச்சிக்குச் சென்று, கடந்த வாரம் மேட்டூர் அணையை திறந்து விட்டிருக்கிறோம், அந்தத் தண்ணீர் முறையாக நாகப்பட்டினம் வரைக்கும் செல்லுகிறதா என்று பார்வையிடுவதற்காக நானே நேரிலே செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

அதற்காகத் தான் நான் விரைவாக வந்து, விரைவாகவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, விரைவாகவே என் உரையை நிறைவு செய்து விடைபெற வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்திருக்கிறேன். அதற்கு நீங்கள் அனுமதி தரவேண்டும், தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று சொல்லி, என் உரையை நிறைவு செய்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories