சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலையினை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, “கலைஞர் சிலையை திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் கலைஞர். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கலைஞர்.
இந்தியாவின் பெருமை மிக்க முதலமைச்சர்களின் கலைஞரும் ஒருவர். என் இளம் வயதில் கலைஞரின் உரையால் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். கலைஞர் கைது செய்யப்பட்ட போது ஜனநாயகத்திற்காக வாதாடினேன். கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், தமது தரப்பு கருத்தை முன்வைப்பதில் கலைஞர் தனித்திறன் கொண்டவர்.
மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு வளர்ச்சி அடையும். நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிய - மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். தாய்மொழியே இதயத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும். வேற்றுமையில் ஒற்றுமையே நமது நாட்டின் சிறப்பு. இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்று அங்கீகரிக்க வேண்டும். எந்த மொழியையும் திணிக்க கூடாது” என தெரிவித்துள்ளார்.