தமிழ்நாடு

“என்னுடைய திருமணத்திற்கு நேரடியாக வந்து வாழ்த்தினார் காமராஜர்” : மலரும் நினைவுகளை பகிர்ந்த முதலமைச்சர் !

என்னுடைய திருமணத்திற்கு நேரடியாக வந்து வாழ்த்தியவர் காமராஜர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“என்னுடைய திருமணத்திற்கு நேரடியாக வந்து வாழ்த்தினார் காமராஜர்” : மலரும் நினைவுகளை பகிர்ந்த முதலமைச்சர் !
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் இன்று (26.5.2022) சென்னை, கொளத்தூர், திரு.வி.க.நகரில், பெருந்தலைவர் காமராஜர் சமுதாய நலக் கூடத்தில், 9 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்பது தம்பதியர்களுக்கு திருமணத்தை நாம் இங்கே ஒன்று சேர்ந்து நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு நிறைவேற்றி இருக்கிறோம். இங்கு 9 ஜோடிகள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், கணேஷ்-சத்தியப்பிரியா, மணிகண்டன்-அனிதா, சரண்-யோகேஸ்வரி, இளங்கோவன்-சாந்தி, பரந்தாமன்-பிரேமா, விஜய் ஆனந்த்-அம்மு, கிருஷ்ணமூர்த்தி-ரஞ்சனி, மகேந்திரன்-சினேகா, பார்த்திபன்-ரேவதி இவர்களுக்கு இன்றைக்கு நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த மணவிழாவை நடத்தி வைத்திருக்கிறோம். மணவிழா கண்டிருக்கக் கூடிய அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து, அவர்கள் வீட்டிற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் அவர்களையெல்லாம் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இங்கே நடந்து கொண்டிருக்கக்கூடிய இந்தத் திருமணத்தை பொருத்தவரைக்கும், இந்த மண்டபத்தின் வரலாறு உங்களுக்குத் தெரியும். நான் சட்டமன்ற உறுப்பினராக முதல் முறையாக இந்த கொளத்தூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஒவ்வொரு பகுதியாக, ஒவ்வொரு வட்டமாக, சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலே ஆய்வு நடத்தி இருக்கிறேன். அப்படி ஆய்வு நடத்துகிற போது, இந்த மண்டபம் என்னுடைய கண்ணிற்குப்பட்டது. இந்த மண்டபம் என்றால், இப்படி இருக்கிற மண்டபம் இல்லை, ஒரு பாழடைந்த மண்டபமாக, அதில் சமூக விரோதிகள் எப்படியெல்லாம் அதை சின்னாபின்னமாகி வைத்திருந்தார்கள் என்ற அந்த நிலையில் தான் அந்த மண்டபம் நமக்குக் காட்சி தந்து கொண்டிருந்தது.

அப்பொழுது இந்தப் பகுதியில் இருக்கக்கூடியவர்கள், வணிக சங்கத்தைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள் பலர் என்னிடத்திலே சந்தித்துச் சொன்னார்கள், இந்த மண்டபம் நம்முடைய பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் 1966-ஆம் ஆண்டு, சென்னை மாநகராட்சியின் மூலமாக கட்டப்பட்டிருக்கிறது. அதை பெருந்தலைவர் காமராஜ் தான் திறந்து வைத்தார்கள் என்று என்னிடத்தில் சொன்னார்கள். ஆகவே இதை எப்படியாவது புதுப்பித்து, ஒரு பெரிய அளவிலே இல்லை என்று சொன்னாலும், நடுத்தர மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில், ஒரு திருமண மண்டபத்தை நீங்கள் கட்டித் தர வேண்டும், அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று என்னிடத்தில் வேண்டுகோளாக எடுத்து வைத்தார்கள்.

அதற்கு பிறகு இதைக் கட்டுவதற்கான முயற்சிகளில், நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அப்படி ஈடுபடுத்திக் கொண்டிருந்த நேரத்தில் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றார்கள். இந்த இடத்தில் திருமண மண்டபம் கட்டக்கூடாது என்று அரசியல் நோக்கத்தோடு, அரசியல் காழ்ப்புணர்வோடு குறிப்பிட்ட ஒரு சிலர் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். நீதிமன்றத்தில் எதிர்த்து நாம் வழக்கை நடத்தினோம். நம்முடைய மாநிலங்களவை உறுப்பினராக இருக்கக்கூடிய மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்கள் தான் அந்த வழக்கை பொறுப்பேற்றுக் கொண்டு நடத்தி, அதில் மிகப் பெரிய அளவிற்கு வாதாடி, போராடி வெற்றி பெற்று, இந்த மண்டபம் இங்கே கட்டப்படும் என்ற ஒரு சூழ்நிலை உருவாகியது.

அதற்குப் பிறகு கட்டுகின்ற பணியில் நாம் ஈடுபட்டோம். அப்படி ஈடுபட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு 25 சதவீதப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய நேரத்தில், கொரோனா என்ற ஒரு கொடிய தொற்று நோய் தாக்க ஆரம்பித்தது. அதனால் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் எந்தப் பணியையும், நாம் நிறைவேற்ற முடியவில்லை. அந்த பணிகள் எல்லாம் கொஞ்சம் கிடப்பில் இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை வந்தது. ஆனால் அதற்குப் பிறகு கொரோனா நோய் தொற்றிலிருந்து கொஞ்சம் விடுபட்ட நேரத்தில், இதை வேகப்படுத்தி, விரைவுப்படுத்தி, இதை முழுமையாக கட்டி முடித்து, மிகச் சிறப்பான வகையில், இதுவரையில் ஒரு மாநகராட்சியின் திருமண மண்டபம் என்பது இவ்வளவு வசதிகளோடு எங்கேயாவது இருக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்று அழுத்தந்திருத்தமாக சொல்லமுடியும்.

குளிர்சாதன வசதிகளோடு ஒரு திருமண மண்டபம் (Air condition), அதற்குப் பிறகு கார்களை எல்லாம் நிறுத்துவதற்கு அதற்கேற்ற வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மணமகனுக்கு தனி அறை, மணமகளுக்கு தனி அறை, அவருடைய உறவினர்கள் தங்குவதற்கும் தனி அறைகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மிகப் பெரிய சமையல் கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது. பரிமாறக்கூடிய இடமும் அமைக்கப்பட்டிருக்கிறது. 500-லிருந்து 700 பேர்கள் மண்டபத்தில் உட்கார்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. உணவருந்தக்கூடிய இடத்தில் 200 பேர்கள் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய அளவிற்கு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, லிஃப்ட் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இப்படி பல்வேறு வசதிகளோடு ஒரு மண்டபம் அமைந்திருக்கிறது என்று சொன்னால், அது நம்முடைய கொளத்தூர் தொகுதிக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை. அது மட்டுமல்ல, இங்கே இருக்கக்கூடிய சில வணிகப் பெருமக்கள், இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய பொதுநல சங்கத்தை சார்ந்திருக்கக்கூடியவர்கள், பொதுமக்கள், என்னிடத்தில் ஒரு கோரிக்கை வைத்தார்கள். இந்த மண்டபத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் அவர்களே நேரடியாக வந்து திறந்து வைத்திருக்கிறார். ஆகவே நீங்கள் புதிதாகக் கட்டி அது திறக்கப்படுகின்ற நேரத்தில் அவருடைய பெயரைத்தான் சூட்ட வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்கள். நான் சொன்னேன், நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் அவருடைய பெயரைத்தான் நான் வைக்கப் போகிறேன் என்று நான் அப்போதே அவர்களுக்கு உறுதி தந்தேன்.

அதுமட்டுமல்ல, அவர் இந்த மண்டபத்தை 1966ஆம் ஆண்டு திறந்து வைத்த நேரத்தில் அவரால் திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற கல்வெட்டு இருக்கின்றது. அந்தக் கல்வெட்டையும் பத்திரமாக பாதுகாத்து, அங்கேயே வைக்கவேண்டும் என்று நான் உத்தரவிட்டேன். ஆகவே அந்த அடிப்படையில் தான் மண்டபம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமென்று சொன்னால், அரசியல் ரீதியாக இன்றைக்கு நான் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை மதிப்பது மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், என்னுடைய திருமணத்திற்கு நேரடியாக வந்து என்னை வாழ்த்தியவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், அதையும் இப்போது நினைத்து பார்க்கிறேன்.

என்னுடைய திருமணத்திற்கு நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் இல்லத்தில் உடல்நலிவுற்று, ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது தலைவர் கலைஞர் முக்கியமான தலைவர்களுக்கெல்லாம் என்னுடைய திருமணத்திற்கு அழைப்பிதழை நேரடியாக கொண்டு சென்று அவரே கொடுத்தார். அப்போது பெருந்தலைவர் காமராஜர் தியாகராய நகர் பகுதியில் இருக்கின்ற திருமலைப் பள்ளியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய வீட்டிற்குச் சென்று அந்த அழைப்பிதழை கொடுத்தபோது, பெருந்தலைவர் காமராஜர் சொன்னாராம், என் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது, வருவதற்கு எனக்கு வாய்ப்பு இல்லை. இருந்தாலும், உங்கள் மகன் ஸ்டாலினைப் பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். மிகவும் சுறுசுறுப்பான இளைஞராக இருக்கிறார். அவரை நான் எப்படியாவது நேரடியாக வந்து வாழ்த்த வேண்டும் என்று எனக்கு ஆசை தான். என்ன செய்வது என்று புரியவில்லை என்று சொன்னாராம். உடனே தலைவர் கலைஞர் சொன்னாராம், நீங்கள் வருவதாக இருந்தால், நீங்கள் வருவதற்கு வாய்ப்பு இருந்தால், நான் மண்டபத்தையே மாற்றி உங்கள் கார் மேடையில் வந்து நிற்க வசதியாக ஏற்பாடு செய்ய காத்திருக்கிறேன் என்று சொன்னாராம். அப்படியென்றால், நான் வருகிறேன் என்று பெருந்தலைவர் காமராஜர் சொன்னாராம்.

என்னுடைய திருமணம், இப்போது அறிவாலயம் இருக்கிறதே அதற்கு அருகில் இருக்கக்கூடிய ஆபட்ஸ்பரி மண்டபத்தில் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மேடைக்கு கார் வர முடியாது. அதனால் தலைவர் கலைஞர் என்ன செய்தார் என்று கேட்டால், அண்ணா சாலையில் இருக்கக்கூடிய உம்மிடியார்ஸ், அங்கே ஒரு பந்தலை போட்டு, அப்போது மாவட்ட செயலாளராக இருந்த சீத்தாபதி அவர்களிடத்தில் உத்தரவிட்டு, அந்த உம்மிடியார்ஸ் என்கிற நிறுவனத்தைச் சார்ந்திருக்கக்கூடிய அந்தத் திடலில் ஒரு பந்தலை போட்டு, கார் மேடைக்கு வந்து நிற்கக்கூடிய அளவிற்கு ஏற்பாடு செய்து, அவருடைய கார் மேடைக்கு வந்து நின்று அதிலிருந்து இறங்கிவந்து உட்கார்ந்து என்னை வாழ்த்திவிட்டுச் சென்றவர் தான் நம்முடைய பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இந்த திருமண நிகழ்ச்சியின் காரணமாக என்னுடைய திருமணம் இப்போது நினைவுக்கு வந்துவிட்டது, வேறு ஒன்றுமில்லை.

ஆக, அப்படிப்பட்ட பெருந்தலைவராக எல்லோரும் போற்றக்கூடிய தலைவராக, ஏழை பங்காளராக, கல்விக்கு கண் தந்த தலைவராக விளங்கிய நம்முடைய பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய பெயர் இந்த மண்டபத்திற்கு சூட்டப்பட்டு இருக்கிறது. ஆகவே, இந்த ஒன்பது ஜோடிகளுக்கு மட்டுமல்ல, இன்னும் எண்ணற்ற ஜோடிகளுக்கு இந்த மண்டபத்தில் திருமணம் நடைபெற காத்திருக்கக்கூடிய நிலையில் இருக்கிறது. ஆகவே, இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள், வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் பெற்று சிறப்போடு வாழ்வாங்கு வாழ்ந்து புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய "வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டர்களாக இருந்து வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று வாழ்த்தி, விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories