தமிழ்நாடு

“அன்று ஸ்டெல்லா மேரிஸ் போஸ்டரால் போலிஸ் ஸ்டேஷன் போனேன்.. இன்று..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

பெண்கள் கல்விக்கு தி.மு.க அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“அன்று ஸ்டெல்லா மேரிஸ் போஸ்டரால் போலிஸ் ஸ்டேஷன் போனேன்.. இன்று..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.5.2022) சென்னை, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் 75-வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி ஆற்றிய உரை:-

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருமை மா. சுப்பிரமணியன் அவர்களே, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி தயாநிதி மாறன் அவர்களே,ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா. எழிலன் அவர்களே, பிரோவின்சியல் சுப்பீரியர் அருட்சகோதரி டாக்டர் ஃபிரான்சிஸ்கோ நிர்மலா அவர்களே, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி டாக்டர் ரோசி ஜோசப் அவர்களே, கல்லூரியின் துணை முதல்வர்கள்: டாக்டர் ரிஜி மணிமேகலா அவர்களே, டாக்டர் ஃபெல்பின் சி.கென்னடி அவர்களே,டாக்டர் வித்யா சீனிவாசன் அவர்களே,பேராசிரியப் பெருமக்களே, கல்லூரியின் நிர்வாகிகளே,சிறப்பு விருந்தினர்களே,என்னுடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய ஸ்டெல்லா மாரிஸ் மாணவியர் செல்வங்களே,உங்களை எல்லாம் ஈன்றெடுத்திருக்கக்கூடிய பெற்றோர் பெருமக்களே,பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே,உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான மாலை வணக்கத்தை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் 75-ஆம் ஆண்டின் விழாவினை முன்னிட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த சிறப்புக்குரிய விழாவிலே நானும் பங்கெடுத்து உங்களிடத்திலே சில கருத்துக்களை எடுத்து வைக்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய கல்லூரியினுடைய நிர்வாகத்திற்கும், கல்லூரியினுடைய முதல்வர் அவர்களுக்கும், முக்கியமாக, உங்களுக்கும் நான் என்னுடைய நன்றியை, வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி என்பது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு கல்லூரியாக இருந்திருக்கிறது, இருக்கிறது, இருக்கவும் போகிறது. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், நான் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, சேத்துப்பட்டில் இருக்கக்கூடிய ஹாரிங்டன் ரோட்டில் அமைந்திருக்கக்கூடிய எம்.சி.சி. பள்ளிக்கூடம், (Madras Christian College High School) அங்கு தான் என்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தேன். கோபாலபுரத்தில் இருக்கக்கூடிய என்னுடைய வீட்டிலிருந்து அந்தப் பள்ளிக்கு நான் போவதற்கு, கோபாலபுரத்திலிருந்து நடந்து வந்து, இந்த ஸ்டெல்லா மாரிஸ் பஸ் ஸ்டாண்டிலே தான் நின்று பேருந்தில் ஏறி, அந்தப் பேருந்தினுடைய எண்.29C, அந்தப் பேருந்தில் 15 அல்லது 20 நாட்களுக்கு முன்பு கூட நான் வழியிலே நிறுத்தி ஏறி, அந்தப் பேருந்தில் பயணம் செய்யக்கூடிய மகளிர் இலவசமாக பயணம் செய்யக்கூடிய அந்தத் திட்டத்தை நான் ஆய்வு செய்தேன். ஆக, இங்கு இருந்து ஏறி நுங்கம்பாக்கத்தில், ஹாரிங்டன் ரோடில் இறங்கி, அதற்குப் பிறகு நான் என்னுடைய பள்ளிக்கு செல்வதுண்டு. அதேபோல் அங்கிருந்து, ஸ்டெர்லிங் ரோடில் பஸ் ஏறி, இந்த ஸ்டெல்லா மாரிஸ் பஸ் ஸ்டாண்டில் இறங்கி அதற்குப் பிறகு தான் நான் வீட்டுக்குப் போவதுண்டு. ஆக, அதுதான் மறக்க முடியாக நிகழ்ச்சியாக இன்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு செய்தியும் நான் சொல்லியாக வேண்டும். 1971ஆம் ஆண்டு தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் வெற்றிப் பெற்ற போது, அந்தத் தேர்தலை ஒட்டி நான் பிரச்சார நாடகங்களில் நடித்தேன். ஏறக்குறைய 40 நாடகங்கள் தமிழகம் முழுவதும் நடத்தி இருக்கிறேன். ஆட்சிக்கு வந்த பிறகு 1971ஆம் ஆண்டு வெற்றி விழா நாடகத்தை சென்னையில் நான் நடத்தினேன். அதற்கு முதலமைச்சராக அன்றைக்கு இருந்த கலைஞர் அவர்களும் தலைமையேற்க வந்தார்கள், முன்னிலைப் பொறுப்பை மறைந்த மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர் அவர்களும் ஏற்றார்கள். அதற்காக விளம்பரம் செய்வதற்காக, இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னை நகரம் முழுவதும் சுவரொட்டியைக் கொண்டு சென்று நாங்கள் ஒட்டினோம்.

விடிய, விடிய எல்லாப் பகுதிகளிலும் ஒட்டிவிட்டு, கடைசியாக ஒரு சைக்கிள் ரிக் ஷாவில் நான் உட்கார்ந்திருக்கிறேன். என்னோடு வந்த தோழர்கள் எல்லாம் வரிசையாக ஒட்டிக் கொண்டு வருகிறார்கள். கொஞ்சம் கண் அயர்ந்து விட்டேன். நான் அந்த சைக்கிள் ரிக் ஷாவில் படுத்து உறங்கி விட்டேன். விடியற்காலை 4 மணி இருக்கும். அப்போது இந்த வழியாக சென்று கொண்டிருந்தபோது, இந்த ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியினுடைய காம்பவுண்ட் சுவரில் என்னோடு வந்த தோழர் ஒருவர் சுவரொட்டி ஒட்டி விட்டார். அப்போது காவலுக்காக வெளியில் இருந்த ஒரு காவலர் இங்கே ஒட்டக்கூடாது என்று அந்த தோழரிடத்தில் வாதம் நடத்த, அதற்குப் பிறகு தேனாம்பேட்டையில் இருக்கக்கூடிய காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்துவிட்டார்.

“அன்று ஸ்டெல்லா மேரிஸ் போஸ்டரால் போலிஸ் ஸ்டேஷன் போனேன்.. இன்று..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

அங்கிருந்து காவலர்கள் வந்து எங்களைக் கடுமையாகக் கண்டித்து, இன்னும் கூட சொல்லவேண்டும் என்று சொன்னால், காவல் நிலையத்தில் எங்களை அழைத்து சென்று உட்கார வைத்து, அப்போதும் நான் யார் என்று சொல்லவில்லை, சொல்லவும் விரும்பவில்லை. அப்படி நான் பயன்படுத்துபவனும் அல்ல. அதற்கு பிறகு அவர்களாகவே தெரிந்து கொண்டு எங்களை வெளியில் அனுப்பிவிட்டார்கள். எதற்காக சொல்கிறேன் என்றால், ஒரு காவலரால், நான் கண்டிக்கப்பட்டு, என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து அனுப்பி வைத்தார்கள். இன்றைக்கு இந்த காவல்துறையையும் பொறுப்பேற்றுக் கொண்டு, முதலமைச்சாராகவும் பொறுப்பேற்றுக் கொண்டு, இந்தக் கல்லூரிக்கு வந்து உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பை, இந்த விழாவில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

இன்னொரு தாக்கத்தை இந்தக் கல்லூரியைப் பொறுத்தவரைக்கும் நான் சொல்ல வேண்டுமென்றால், உங்களுடைய காம்பவுண்ட் சுவரில் இப்பொழுது கலை, தமிழ் கலாச்சாரம் இதையெல்லாம் பற்றி ஓவியங்களாக தீட்டப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய காட்சியை நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. இந்த வழியாக போகிறபோதெல்லாம், இந்தக் கல்லூரியினுடைய மாணவிகள் அந்த ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கக்கூடிய காட்சியை நானே நேரடியாக பலமுறை பார்த்ததுண்டு. அதைப் பார்த்துத்தான் நான் பல்வேறு அரசுத் துறை அலுவலர்களோடு பேசும்போது ரெயில்வே மேம்பாலங்களாக இருந்தாலும், வாகனங்கள் போகக்கூடிய மேம்பாலங்களாக இருந்தாலும், முக்கியமான இடங்களில், எப்படி ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் அந்தக் காம்பவுண்டில் மாணவிகள் ஓவியங்களை தீட்டி வைத்திருக்கிறார்களோ, அதேபோல் நீங்களும் அந்தப் பணியிலே ஈடுபடவேண்டும் என்று நான் அறிவுறுத்தியிருக்கிறேன். பல இடங்களில் அது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த உணர்வு எனக்கு ஏற்பட்டதற்குக் காரணம் நீங்கள் தான் என்பதை நான் இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டுப்பாட்டுக்கு பெயர் போன கல்லூரி இந்த ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி.75 ஆண்டுகளை இந்தக் கல்லூரி கடந்திருக்கிறது என்று சொன்னால், இதில் படித்திருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான மாணவியர்கள் இன்று உலகம் முழுவதும் சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. எனவே, லட்சக்கணக்கான வாழ்வில் ஒளியேற்றிய ஒரு கல்லூரிக்கு நான் வந்திருப்பது, இங்கே வரவேற்புரை ஆற்றியபோது நான் வந்திருப்பதை பெருமையாக அவர்கள் சொன்னார்கள். உங்களுக்கு பெருமையோ, இல்லையோ எனக்கு நிச்சயம் பெருமை என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கல்லூரிக்கு இருக்கும் ஒரு முக்கியமான பெருமை என்ன என்று கேட்டால் – இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்ட் 15 அன்று தொடங்கப்பட்டது தான் ஒரு மிகப்பெரிய சிறப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவானது அரசியல் விடுதலை அடைந்த நாளில் - கல்வி விடுதலைக்காக - அதிலும் குறிப்பாக பெண்களின் கல்வி விடுதலைக்காக இத்தகைய கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது.

உங்களது அறிக்கையிலேயே, 'கல்வியை அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பொருளாதார ரீதியாகவும் சமூகரீதியாகவும் பின் தங்கிய சமூகங்களில் கல்வி விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காகத் தொடங்கினோம்' என்று அதிலே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறீர்கள். இந்தக் கல்லூரியைப் பாராட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும் அதைவிட வேறு காரணம் எதுவும் நிச்சயமாகத் தேவையில்லை என்பதை நான் உணருகிறேன்.

“பெண்கட்குக் கல்வி வேண்டும்

குடித்தனம் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்

மக்களைப் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்

உலகினைப் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்

கல்வியைப் பேணுதற்கே!'' –

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடியிருக்கிறார். அந்த வகையில் பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன்னிகரற்ற கல்வி நிறுவனமாக ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

“அன்று ஸ்டெல்லா மேரிஸ் போஸ்டரால் போலிஸ் ஸ்டேஷன் போனேன்.. இன்று..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

கல்வி என்பது வெறும் பட்டமல்ல, அறிவும் ஆற்றலும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் தரக்கூடியது. இத்தகைய குணங்களையும் உருவாக்கக்கூடிய நிறுவனமாக இது செயல்பட்டு வருவதை நான் நன்றாக அறிவேன். கல்வியுடன் இணைந்து பல்வேறு பயிற்சிகளையும் அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். மாணவியரின் தனித்திறமைகள் அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்து கொண்டிருக்கிறீர்கள். சமூக சேவையாற்ற கற்றுத் தருகிறீர்கள். திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் இங்கு இருக்கின்றன. மேற்கத்திய இசை மற்றும் நுண்கலை வரலாற்றில் இளங்கலைப் பட்டங்களையும், சமூகப் பணி மற்றும் இந்திய இசையில் முதுகலைப் பட்டங்களையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கியதன் தனிச்சிறப்பு இந்தக் கல்லூரிக்கு உண்டு.

கூடுதலாக, ஆங்கிலம், பொருளாதாரம் மற்றும் நுண்கலைகளில் எம்.ஏ. பட்டப்படிப்புகளை வழங்கிய சென்னையின் முதல் மகளிர் கல்லூரி இந்தக் கல்லூரியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான பயிற்சி நவம்பர் 2009 இல் தொடங்கப்பட்டுள்ளது. தொழில் பயிற்சி வழங்கி வருகிறீர்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் அனைவருக்கும் எடுத்துக்காட்டான கல்வி நிறுவனமாக ஸ்டெல்லா மாரிஸ் திகழ்ந்து வருகிறது.

இங்கே குறிப்பிட்டுக் காட்டியதைப்போல, மயிலாப்பூரில் ஒரு சிறிய கட்டடத்தின் மாடியில் 32 மாணவியருடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, இன்றைய தினம் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம், உங்களுக்குள் இருக்கும் சமூக நோக்கம் தான் என்பதை நான் அழுத்தந்திருத்தமாக நான் குறிப்பிட விரும்புகிறேன். பரந்து பட்ட சமூக நோக்கமும், சேவை மனப்பான்மையும் இருப்பதால் தான் இத்தகைய வெற்றியை, வளர்ச்சியை உங்களால் அடைய முடிந்திருக்கிறது.

தமிழகத்தில் இப்போது அமைந்துள்ள அரசானது, கல்விக்கு அதிலும் குறிப்பாக பெண் கல்விக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மகளிர் அனைவருக்கும் கட்டணமில்லா பேருந்து சேவையை வழங்கியதன் மூலமாக பெண்குலத்துக்கு மாபெரும் சேவையை இந்த அரசு உருவாக்கி இருப்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். உயர் கல்வியைப் பெறுவதற்காக கல்லூரிகளில் சேரக்கூடிய அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவோம் என்று அறிவித்து அதையும் செயல்படுத்த இருக்கிறோம். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் கல்வியில் ஆற்றலில் மேன்மை அடைய, நான் முதல்வன் என்ற திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம்.

இன்று காலையில் இராணிமேரிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நான் கலந்து கொண்டேன். இளைஞர்களின் திறன்மிக்க திருவிழாவாக அது நடைபெற்றது. அதே விழாவில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்திருக்கக்கூடிய பொருட்களின் கண்காட்சியையும் நான் திறந்து வைத்தேன். மகளிர் அனைவரும் தங்களது சொந்த முயற்சியால் முன்னேறி - யார் தயவையும் எதிர்பார்க்காமல் வாழ முயலவேண்டும் என்ற அந்த அடிப்படையில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டது தான் மகளிர் சுய உதவிக்குழுக்கள். இலட்சக்கணக்கான மகளிர் குழுக்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கில் அவர்களுக்கு நிதி உதவியை நாம் வழங்கி வருகிறோம்.

உயர் கல்வியில் பொற்காலம் என்று சொல்லத் தக்க வகையில் உயர் கல்வியில் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு செய்து வருகிறது. கல்வியில் - வேலை வாய்ப்பில் - தொழில் வளர்ச்சியில் - சமூக வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்ட, திராவிட மாடல் கொள்கையின் படி இன்றைய அரசு செயல்பட்டு வருகிறது என்பதை 75 ஆண்டுகால கல்விப் பெருமை கொண்ட இந்த ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி விழாவில் சொல்லிக் கொள்வதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.

திராவிட இயக்கம் என்பதே ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற தத்துவத்தின் அடைப்படையில் உருவாக்கப்பட்ட இயக்கம் ஆகும். அத்தகைய சமூகநீதித் தத்துவத்தை தனது கல்வி நிறுவனத்திலும் பயன்படுத்தும் இந்த நிறுவனத்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன். உங்களது தொண்டு நூற்றாண்டுகள் கடந்து, பல நூற்றாண்டுகளுக்குத் தேவை என்பதை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

அன்புள்ள மாணவியர்கள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் என்னவென்று கேட்டால், இந்த கல்லூரிக் காலம் என்பது வாழ்வில் இன்னொரு முறை கிடைக்காது. எனவே, கல்லூரிக்காலக் கல்வியை முழுமையாக, முறையாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், உங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், படிப்பு - பட்டம் ஆகியவை கடந்து, தனித்திறமைகள் கொண்டவர்களால் மட்டும் தான் முன்னேற்றம் காண முடியும்.

அத்தகைய திறமைசாலிகளாக நீங்கள் வளர்ந்து, உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த மாநிலமும் பயனுறக்கூடிய வகையில், இந்த நாடும் பயனுறக்கூடிய வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் உரிமையோடு விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நானும் வந்ததில் இருந்து உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். நானும் பள்ளியில் படிக்கிறபோது, கல்லூரியில் படிக்கிறபோது, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுண்டு. அந்த நிகழ்ச்சிக்கு பல சிறப்பு விருந்தினர்களையெல்லாம் அழைத்து வந்து அந்த நிகழ்ச்சிகளை நடத்தியதுண்டு. ஆனால், அப்படி வரக்கூடியவர்கள் முழுமையாக பேச முடியாது. ஏதாவது சில்மிஷம் செய்து, கரவோலி எழுப்பி வந்தவர்கள் பேசமுடியாமல், பாதியிலே திருப்பி அனுப்பிய வரலாறெல்லாம் எங்களுக்கு உண்டு.

ஆனால், இன்றைக்கு அந்த நிலை இல்லை. வரும்போதே கொஞ்சம் பயந்துகொண்டு தான் வந்தேன். ஆனால், ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் இருக்கக்கூடிய கட்டுப்பாட்டைப் பார்க்கிறபோது உள்ளபடியே நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். தொடங்கியதில் இருந்து முடிக்கிறவரையில் இவ்வளவு பொறுமையாக என்னை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, கரவொலி எழுப்பி எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய வகையில், அதே நேரத்தில் ஒரு கட்டுப்பாட்டோடு இருந்து உங்கள் கண்ணியத்தை நீங்கள் காப்பாற்றியிருக்கிறீர்கள். எனவே, மேலும் பல சிறப்புக்களைப் பெற என்னுடைய அன்பான வாழ்த்துகளை, பாராட்டுகளை, நன்றியைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories