தமிழ்நாடு

“ஆளுநருக்கான இடம் இதுதான்” : பேரறிவாளன் விடுதலை தீர்ப்பும்.. நீதிமன்றம் சொல்லாமல் சொல்லிய கருத்தும்..!

மாநில உரிமைகளை நிலைநாட்டும் வண்ணம் பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுத்துள்ளது உச்சநீதிமன்றம்!

“ஆளுநருக்கான இடம் இதுதான்” : பேரறிவாளன் விடுதலை தீர்ப்பும்.. நீதிமன்றம் சொல்லாமல் சொல்லிய கருத்தும்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.

முன்னதாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு பற்றி உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் பேசும் போது, மாநில அரசு அனுப்பக் கூடியே பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என கேள்வி எழுப்பினர்.

மேலும், ஆளுநர் முடிவு எடுக்கும் அதிகாரம் பற்றி ஒவ்வொரு கோப்பையும் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பின்னர் ஆளுநர், குடியரசுத் தலைவர்களின் அதிகாரிங்களுக்குள் போகாமல் நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது?. மாநில அரசுகளின் ஒவ்வொரு முடிவுக்கும் ஆளுநர் எதிராக இருந்தால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். பேரறிவாளனை விடுவிப்பது குறித்து தனது நிலைப்பாட்டை ஒருவாரத்திற்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கேடு விதித்து உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் நடராஜ் ஆஜரானார். அப்போது பேசிய கூடுதல் சொலிசிட்டர் பேரரிவாளனை விடுவிப்பது குறித்து குடியரசு தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஆளுனர் என்ன முடிவு எடுத்துள்ளார்? 2,3 ஆண்டுகளாக ஆளுநரிடம் இருக்கிறது. விரைவில் ஆளுநர் முடிவு எடுப்பார் என்று கடந்த முறை கூறிய நிலையில் ஆளுநரின் முடிவு என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர்.

மேலும், ஆளுநர் மாநில அரசின் தலைவர். அப்படி இருக்கும் போது அவருக்காக ஒன்றிய அரசு ஆஜராவது ஏன்?. ஆளுநர் உயர் பதவி வகிப்பதால் நாங்கள் கூடுதலாக எதுவும் கூற விரும்பவில்லை. எல்லா குற்றங்களுக்கும் கருணை மனு மீது குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க முடியும் என்பது போல் ஒன்றிய அரசின் வாதம் உள்ளது.

14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவிப்பவர்களை அரசியல் சாசன சட்டம் 72 படி குடியரசு தலைவரும், 161 படி ஆளுனரும் விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஆளுனர் ஏன் முடிவு முடியாது என்பதுதான் கேள்வி என நீதிபதிகள் சாடினார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என நீதிபதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “ஆளுநர் காலதாமதம் செய்ததால் நீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்கிறது. அரசியல் சாசனப் பிரிவு 161ன் படி மாநில அரசு எடுத்த முடிவை ஆளுநர் செயல்படுத்தவில்லை. ஆளுநர் காலதாமதம் செய்தது தவறு.

ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தது அரசியல் அமைப்பு சட்டப்படி தவறு. ஆளுநர் செயல்படாத விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசின் கருத்தை பெறத் தேவையில்லை. முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.

மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. பேரறிவாளன் விவகாரத்தை மீண்டும் ஆளுநர் பரிசீலனைக்கு அனுப்ப விரும்பவில்லை. பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஆளுநர் காலதாமதம் செய்ததாலேயே உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை, குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் வழக்கறிஞர் கூறிய அனைத்து வாதங்களையும் நிராகரித்தது உச்சநீதிமன்றம். மாநில உரிமைகளை நிலைநாட்டும் வண்ணம் பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுத்துள்ளது உச்சநீதிமன்றம்!

banner

Related Stories

Related Stories