உகாண்டாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.6.58 கோடி மதிப்புடைய 940 கிராம் ஹேராயின் போதை பொருள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்.
வெளிநாட்டில் இருந்து பெருமளவு போதைப்பொருள் விமானத்தில் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக தீவிரமாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அதிகாலை 4:45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா்.
அப்போது உகாண்டா நாட்டைச் சேர்ந்த எள்ளி ஜேம்ஸ் ஓப்பிள் (27) என்பவர் சுற்றுலாப்பயணி விசாவில், உகாண்டாவில் இருந்து சார்ஜா வழியாக சென்னைக்கு வந்தார்.அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர்.
அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவர் உடமைகளை சோதித்தனர். உடைமைகளில் எதுவும் இல்லை. பின்பு தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். ஆடைகளிலும் எதுவும் இல்லை.
ஆனாலும் சந்தேகம் தீராத சுங்க அதிகாரிகள், அவரை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தனர். அப்போது அவருடைய வயிற்றுக்குள் கேப்ஸ்கள் மாத்திரைகளை விழுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு இனிமா கொடுத்து அவர் வயிற்றில் வழிந்திருந்த கேப்சல்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக 2 நாட்களாக வெளியே எடுத்தனர். மொத்தம் 80 காப்ஸ்யூல் இருந்தன. அந்த காப்ஸ்யூல்களை உடைத்து பார்த்தபோது, அதனுள் ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர்.மொத்தம் 940 கிராம் ஹேராயின் போதைப்பொருள் இருந்தது. அதன் சா்வதேச மதிப்பு ரூபாய் 6.58 கோடி.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் உகாண்டா பயணியை கைது செய்து அவரை மேலும் விசாரித்தபோது, இவர் சர்வதேச போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. மேலும் அவர் சென்னையில் யாருக்கு இந்த போதைப் பொருளைக் கொடுக்க வந்தார். சென்னையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உகாண்டாவை சேர்ந்த பெண் ஒருவர் இதே போல் வயிற்றுக்குள் கேப்சில்களில் போதை பொருள் கடத்தி வந்த பெண்ணை மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் சென்னை நகரில் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.