கடலூர் மாவட்டம் அரிசிபெரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் எம்.எஸ்.சி. பட்டதாரியான ரம்யா. இவருக்கு வயது 27. அதே மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த ரம்யாவுக்கும், புதுநகரைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த மாதம் 6ம் தேதிதான் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
திருமணமானப் பிறகுதான் ரம்யாவுக்கு கார்த்திகேயன் வீட்டில் கழிவறையே இல்லையென்றது தெரிய வந்திருக்கிறது. இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
அப்போது, விரைவில் வீட்டில் கழிவறை கட்டிவிடலாம் இல்லையெனில் வேறு வீட்டுக்கு குடிபெயரலாம் என கார்த்திகேயன் கூறியிருக்கிறார். இதனால் திருமணமான மறுநாளே ரம்யாவை தாய் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்.
இதனையடுத்து வீட்டில் கழிவறையும் கட்டாமல் வேறு வீடும் பார்க்காமல் கார்த்திகேயன் இதுநாள் வரை இருந்திருக்கிறார். இதனால் கடுமையான விரக்திக்கு ஆளாகி கார்த்திகேயனுடன் ரம்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த நிலையில், வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார் ரம்யா. வெளியே சென்றிருந்த தாய் மஞ்சுளா வீட்டுக்கு வந்த போது ரம்யா தூக்கில் தொங்கியதை கண்டவர் அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரம்யாவை மீட்டவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்.
அதன் பிறகு புதுச்சேரி ஜிப்மரில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தும் அங்கும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு மகள் இறப்புக்கு கணவன் கார்த்திகேயனே காரணம் என திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் தாய் மஞ்சுளா புகாரளித்திருக்கிறார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.