தமிழ்நாடு

‘ஓராண்டு ஆட்சியும்.. முதல்வரின் 29C பயணமும்..’: பேருந்தில் பயணித்தது ஏன்? மனம் நெகிழ்ந்து பேசிய முதல்வர்!

29C பேருந்து என் வாழ்வில் மறக்க முடியாத பேருந்து 29C என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘ஓராண்டு ஆட்சியும்.. முதல்வரின் 29C பயணமும்..’: பேருந்தில் பயணித்தது ஏன்? மனம் நெகிழ்ந்து பேசிய முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்திற்குச் சென்று கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடத்திற்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்துவதற்காகச் சென்றபோது, திடீரென காரை நிறுத்தி அரசு பேருந்தில் ஏறி தி.மு.க அரசின் ஓராண்டு ஆட்சி குறித்துக் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வு குறித்தும், 29c பேருந்தில் பயணம் செய்ததற்கான காரணம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம் என்ற ஒரு திட்டம் பெண்கள் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மட்டும் தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். இப்போதுகூட, இந்தச் சட்டமன்றத்திற்கு வருவதற்கு முன்பு, கோபாலபுரத்திற்கு, தலைவர் கலைஞர் அவர்களுடைய இல்லத்திற்குச் சென்று, அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு, என்னைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு, நானும், நம்முடைய அவை முன்னவர் அவர்களும் மற்றும் அமைச்சர் பெருமக்கள் எல்லாம் காரிலே வந்து கொண்டிருந்தபோது, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையிலே ஒரு பேருந்து நிலையத்திலே இறங்கி நின்றபோது, ஒரு பேருந்து வந்தது.

‘நீங்கள் எல்லாம் காரிலேயே உட்கார்ந்திருங்கள், நான் அந்தப் பேருந்திலே கொஞ்சம் நேரம் பயணம் செய்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லி, 29-C அந்தப் பேருந்தில் ஏறினேன். 29-C பேருந்து என்னுடைய வாழ்நாளிலே மறக்கமுடியாத பேருந்து. ஏனென்றால், பள்ளிப் பருவத்திலே இருந்தபோது, நான் கோபாலபுரத்திலிருந்து 29-C மூலம் பள்ளிக்குச் சென்று வந்தேன்.

அப்போது தலைவர் கலைஞர் அவர்கள், பொதுப் பணித் துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார். நான் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி பேருந்து நிறுத்தத்திலிருந்து, 29-C பேருந்தைப் பிடித்துத்தான் என்னுடைய பள்ளிக்கு, ஸ்டெர்லிங் சாலையில் இறங்கி, அங்கிருந்து சேத்துப்பட்டிற்கு நடந்து போய், பள்ளிக்குச் சென்று படித்தேன்.

‘ஓராண்டு ஆட்சியும்.. முதல்வரின் 29C பயணமும்..’: பேருந்தில் பயணித்தது ஏன்? மனம் நெகிழ்ந்து பேசிய முதல்வர்!

29-C என்ற அந்தப் பேருந்தில்தான் இன்றைக்குக் காலையில் நான் ஏறி பயணித்தேன். அந்தப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த மகளிரிடத்திலே, ‘எப்படி இந்த ஆட்சி நடக்கிறது – ஒரு வருடம் ஆகியிருக்கிறது; இரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம் – உங்களுக்குத் திருப்தியாக இருக்கிறதா?’ என்று கேட்டேன். ‘ரொம்ப திருப்தியாக இருக்கிறது.

உங்களைப் பார்த்ததே அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.’ என்று சொன்னார்கள். இந்த இலவசப் பயணத்தினால் உங்களுக்கு என்ன இலாபம், எவ்வளவு மிச்சமாகிறது? என்ற கேள்விகளையெல்லாம் கேட்டேன். அதற்குரிய விளக்கத்தையெல்லாம் சொன்னார்கள்.

இந்தத் திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினப் பெண்கள் அதிக அளவிலே பயன்பெற்று வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதிலும் குறிப்பாகப் பட்டியலினப் பெண்கள் அதிகமாக பயனடைந்திருக்கிறார்கள்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories