1. பொது இடங்களில் பெண்கள் முழுவதுமாக பர்தா அணிய வேண்டும் - தலிபான் ஆணை
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியப் பிறகு பெண்களுக்கு கடுமையான விதிகளை விதித்து வருகிறது. இந்நிலையில், பொது இடங்களில் வரும் பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என்று தலிபான் அதிரடி கட்டளையை விதித்துள்ளது. வாலிபர்களை சந்திக்கும்போது தேவையில்லாத கோபங்களைத் தவிர்ப்பதற்காக ஷரியா உத்தரவுகளின்படி, மிகவும் வயதான அல்லது இளைமையாக இல்லாத பெண்கள் கண்களைத் தவிர முகத்தை மறைக்க வேண்டும். பெண்களுக்கு வெளியில் முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள் என்றும் தலிபான்கள் கூறியுள்ளனர்.
2.) இலங்கையில் மருந்து பொருட்கள் தட்டுப்பாட்டால் முடங்கிய சுகாதாரத்துறை - மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் நாடு தழுவிய போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அத்தியாவசிய மருந்து பொருட்கள் கிடைக்காததால் சுகாதார கட்டமைப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதால், யாழ்ப்பாணத்தில் அரச மருத்துவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டம் நடத்தினர். இந்நிலையில் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி யாழ்ப்பாணம் மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3.) உக்ரைனுக்கு மேலும் 150 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவி !
உக்ரைனுக்கு மேலும் 150 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவியை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள ராணுவம் மற்றும் பிற உதவிகளின் மொத்த மதிப்பு 3.8 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. அதேபோல், உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவிகளை அனுப்ப நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கும்படியும் அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் தொடர் ராணுவ உதவியால் உக்ரைன் - ரஷியா இடையேயான போர் முடிவுக்கு வராமலும், பேச்சுவார்த்தையின்றி தொடர்ந்து நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
4.) கருங்கடலில் ரஷியாவின் ராட்சத போர்க்கப்பலை மூழ்கடிக்க உக்ரைனுக்கு ரகசிய தகவல்களை அளித்து உதவிய அமெரிக்கா!
உக்ரைன் மீதான ரஷிய போரில், கருங்கடலில் இருந்து கடல் வழி தாக்குதலை தலைமையேற்று நடத்தியது, மோஸ்க்வா என்ற பிரமாண்ட போர்க்கப்பல் ஆகும். உக்ரைன் 2 நெப்டியூன் ஏவுகணைகளை ஏவி, மோஸ்க்வா கப்பலை தாக்கியதில் தீப்பிடித்து கடலில் மூழ்கியது. இந்நிலையில், உக்ரைனால் ரஷியாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங்கடலில் ரஷியாவின் முன்னணி போர்க்கப்பலின் இருப்பிடம் குறித்து அமெரிக்கா பகிர்ந்து கொண்ட உளவுத்துறை ரகசியங்கள் உதவிகரமாக இருந்தன என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
5.) பூமிக்கு திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நான்கு விண்வெளி வீரர்கள் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் விண்கலத்தில் பூமிக்கு திரும்பினர். அமெரிக்க தொழில் அதிபரான எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் விண்வெளி சுற்றுலாவை துவக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 'கேப்ஸ்யூல்' எனப்படும் விண்கலத்தில் நாசாவை சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நேற்று பூமிக்கு திரும்பினர்.அமெரிக்க விண்வெளி வீரர்கள் ராஜா சாரி டாம் மார்ஷ்பர்ன் கய்லா பாரன் மற்றும் ஐரோப்பிய நாடான ஜெர்மன் விண்வெளி வீரர் மத்தியாஸ் மாவ்ரெர் ஆகியார் பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இவர்கள் பூமியை அடைந்தனர்.