சென்னை மாநகர பேருந்துகள் இயக்கப்படும் நேரம், வந்து கொண்டு இருக்கும் இடம் ஆகியவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் "Chennai Bus" என்ற புதிய செயலியை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்து செய்தியார்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் :-
சென்னையில் 3,454 மாநகர பேருந்து ஓடுகிறது. எல்லா பேருந்திலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் சென்னை பேருந்துகள் இயக்கத்தை சென்னை பஸ் செயலி மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலி அறிமுகம் செய்யபட்டுள்ளது. பேருந்து எந்த நேரம் வரும் என்பது குறித்து இனி இந்த செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
தொடர்ந்து, பேசிய அமைச்சர் கொரோனா காலத்திற்கு பிறகு அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் அரசு பேருந்துகளில் செல்லும் மாண்வர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு சில இடங்களில் பள்ளி மாணவர்கள் பேருந்தின் படியில் பயணிக்கும் நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
புதிய பேருந்துகள் வாங்கும் போது தானியங்கி கதவுடன் வாங்க திட்டமிட்டு உள்ளோம். கிராமப்புறங்களிலும் இவ்வகை பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கபடும். பெண்களுக்கான இலவச பேருந்துகள் சில இடங்களில் நிறுத்துவதில்லை என்ற புகார் குறித்து பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.