இலங்கைத் தமிழர்களுக்கு உதவ ஒன்றிய அரசின் அனுமதி கோரி பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தின்மீது அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசி முடித்ததற்குப் பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் உரையாற்றினார்.
பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, மனிதநேயமிக்க தீர்மானத்தை ஆதரித்துப் பேசியிருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இங்கேயிருக்கக்கூடிய பல்வேறு கட்சிகளைச் சார்ந்திருக்கக்கூடிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், இந்தத் தீர்மானத்தை வரவேற்று, ஆதரித்து, இதை ஒருமனதாக நிறைவேற்றிட வேண்டுமென்ற அடிப்படையிலே பேசியதற்கு முதலில் என்னுடைய நன்றியை உங்கள் அத்தனை பேருக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கக்கூடிய இலங்கை நாட்டு மக்களுக்கு உதவிடும் நோக்கில், இன்று தமிழக அரசு அறிவித்துள்ள உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கக்கூடிய மருந்துகள் அடங்கிய உதவி என்பது முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டிருப்பதுதான். இலங்கை நாட்டு மக்களுக்கு இன்னும் உதவி தேவைப்படுமென்றால், அடுத்த கட்டமாக, உதவிகள் செய்வதற்கு தமிழக அரசு என்றைக்கும் தயாராக இருக்கிறது என்பதைப் பேரவைத் தலைவர் வாயிலாக நான் இந்த அவைக்குக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதுமட்டுமல்ல; உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள்கூட குறிப்பிட்டுச் சொன்னார். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’’ என்ற வள்ளலாரின் உணர்வுகளைத் தாங்கி, தமிழ்நாட்டு மக்கள், அதேபோல, அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக அமைப்பினர் உள்ளிட்டோர் இலங்கை நாட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய முன்வந்தால், அவற்றையும் ஒருங்கிணைத்து, ஒன்றிய அரசின் மூலமாக இலங்கை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், அவருடைய சொந்த நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாயைத் தான் வழங்குவதாக இன்று அறிவித்திருக்கிறார். அவர் ஏன் இதை அறிவித்திருக்கிறார் என்றால், மற்றவர்களும் அதைப் பின்பற்ற வேண்டுமென்ற அந்த அடிப்படையில்தான் அதை அறிவித்திருக்கிறார். ஆகவே, அவருடைய அந்த நல்லெண்ணத்திற்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தத் தீர்மானத்தை மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமென்று தங்கள் மூலமாகக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதைத்தொடர்ந்து, இலங்கைத் தமிழர்களுக்கு உதவ ஒன்றிய அரசின் அனுமதி கோரி பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த இந்த அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.