நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள பழவூரில் உச்சினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது. இதில் சுத்தமல்லியை சேர்ந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மார்கரெட் திரேஷாவுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆறுமுகம் திடீரென கையில் வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளரை குத்தியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக காவலர்கள் உடனே அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர், போலிஸார் ஆறுமுகத்தை பிடித்து விசாரணை செய்தபோது சில தினங்களுக்கு முன்பாக வாகன சோதனையின் போது ஆறுமுகம் குடிபோதையில் வந்ததற்காக அவருக்கு உதவி ஆய்வாளர் அபராதம் விதித்துள்ளார்.
இதனால் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் அவரை கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல் உதவி ஆய்வாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், "திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன்.
தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.