பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் நேரடியாக 2ம் ஆண்டு சேருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று சட்டப்பேரவையில் உயர்கல்வி குறித்தான மானியகோரிக்கை மீதான விவாதத்தில் பேசியது வருமாறு:-
”அரசுப் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளை ஒருங்கிணைத்து நிர்வகிக்க திட்டக் கண்காணிப்பு மையம் உருவாக்கப்படும். அதேபோல் புத்தாக்கப் புதிய தொழில்நுட்பத் திறன்களை வழங்க மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புரோடோசெம் என்ற புத்தாக்க பாடப்பிரிவு உருவாக்கப்படும். உலக திறன் அகாடெமி மற்றும் நவீன தொழில்நுட்ப உற்பத்தி மையம் இவையெல்லாவற்றையும் சேர்த்து 89.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான் சொன்ன இவைகளெல்லாம் உருவாக கப்படும்.
அதேபோன்று, பாலிடெக்னிக் கல்வி முடித்து தொழிற் சாலைகளில் பணிபுரிந்து கொண்டே பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டம் பெறுவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படும். படிக்கும்போதே அவர்களுக்கு தொழிற் சாலைகளில் பயிற்சி பெறுவதற்கான திட்டமும் அறிமுகப்படுத்தப்படும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள கல்லூரிகளில் பாலிடெக்னிக் கல்வி முடித்த மாணாக்கர்களுக்கு, பாலிடெக்னிக் முடித்தவர்களுக்கெல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்தில்இடம் கிடையாதென்று சொல்லிவிட்டார்கள். இப்போது பாலிடெக்னிக் கல்வி முடித்த மாணாக்கர்களுக்கு நேரடியாகபொறியியல் இரண்டாம் ஆண்டுசேரலாம். அதுவும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு சேருவதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருக்கிறார். இந்த ஆண்டிலிருந்து அதுவும் தொடரும்” என தெரிவித்துள்ளார்.