ஈரோடு மாவட்டத்தில் ஆன்லைன் டெலிவரி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் வேலை பார்க்கும் நவீன் என்பவர், கொடுமுடியை அடுத்த வேலம்பாளையம் பகுதியில் உள்ள கார்த்திக் என்பவர் ஆன்லைனில் புக் செய்திருந்த மூன்று பார்சல்களை டெலிவரி செய்யச் சென்றுள்ளார்.
பிறகு, டெலிவரி பொருட்களை கார்த்திக் மற்றும் அவரது மனைவி ராதிகாவிடம் கொடுத்துள்ளார். வீட்டிற்கு உள்ளே சென்ற கார்த்திக், அரைமணி நேரம் கழித்து வெளியே வந்து ஆன்லைனில் பணம் செலுத்த முடியவில்லை என்று தெரிவித்து ஒரு பார்சலுக்கான பணத்தை மட்டும் கொடுத்து, மற்ற இரண்டு பார்சல்களையும் நாளை வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.
பிறகு ஒரு பார்சலுக்கான பணம் ரூ.546-ஐ நவீனிடம் கொடுத்துள்ளார். பின்னர் இரண்டு பார்சலையும் வாங்கிய நவீன் அதன், எடை அதிகமாக இருந்தை உணர்ந்துள்ளார். இதுகுறித்து கார்த்தியிடம் அவர் கேட்டபோது தங்களுக்கு எதுவும் தெரியாது என பதிலளித்துள்ளார். இருப்பினும் அவர்கள் மீது அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
உடனே இதுகுறித்து தனது நிறுவன அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். பிறகு அங்கு வந்த அவர்கள் பார்சலை பிரித்து பார்த்தபோது லேப்டாப்புக்கு பதில் மரக்கடையும், ஆப்பிள் வாட்ச்சுக்கு பதில் சாதாரண வாட்ச்சும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து கேட்டபோது அவர் முறையாக பதில் சொல்லவில்லை.
இதனால் இதுகுறித்து டெலிவரி நிறுவனத்தினர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். பிறகு காவல்துறையினர் தம்பதிகளிடம் விசாரணை செய்தபோது, டெலிவரிக்கு வந்த பார்சலை பிரித்து அதில் இருந்த லேப்டாப் மற்றும் ஆப்பிள் வாட்ச்சை எடுத்துக்கொண்டு அதில் மரக்கட்டைகளை வைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து நூதன மோசடியில் ஈடுபட்ட இருவரையும் போலிஸார் கைத செய்துள்ளனர்.