விளையாடிவிட்டு நொறுக்குத் தீனியுடன், குளிர்பானம் அருந்தியதால் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ் (25). இவர் கிழக்கு கடற்கரை சாலை அக்கரி அருகே நண்பர்களுடன் இறகு பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது சோர்வடைந்து, அருகில் உள்ள கடையில் நொறுக்குத் தீனியுடன் குளிர்பானம் ஒன்றைக் குடித்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் பனையூரில் உள்ள நண்பரின் வீட்டுக்கு சென்றபோது மூச்சுத்திணறல் அதிகமானதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால், மூச்சுவிட மிகுந்த சிரமமடைந்ததால் அங்கிருந்து பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சதீஷ் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், பரிசோதனை செய்தில் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக கானத்தூர் போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த சதீஷின் உடலைக் கைப்பற்றி போலிஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
குளிர்பானமே இளைஞரின் உயிரிப்பிற்குக் காரணம் என சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே உயிரிழப்புக்கான காரணத்தைக் கூற முடியும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமீபமாக, பிரபல குளிர்பான நிறுவனங்களின் ஸ்டிக்கர்களைப்போல் போலியாக அச்சிடப்பட்ட பாட்டில்களில் உள்ள குளிர்பானங்களை வாங்கிக் குடிப்பதால் உடல் நலம் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.