கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து, மழைநீர் வடிகால் பணியினை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், பெரியார் நகர், மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையில் 75 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்திகரிப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டதோடு, நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, கொளத்தூர், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:
“என்ன தான் நான் இன்றைக்கு தமிழகத்திற்கே முதலமைச்சராக இருந்தாலும் கொளத்தூர் தொகுதி என்று வருகிறபோது எனக்கு ஒரு உணர்வு, ஒரு பாசம், ஒரு அன்பு தானாகவே வந்துவிடுகிறது. ஆகவே, தமிழ்நாடு முழுவதும் சுற்றி வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், என்னைத் தேர்ந்தெடுத்து, என்னைத் தொடர்ந்து இந்த தொகுதியிலிருந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கக்கூடிய மக்களைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவல் எனக்கு அதிகமாக இருந்து வருகிறது. ஆகவே அந்த ஆவலோடு வந்திருக்கிறேன். அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்பது எப்படி உருவாக்கப்பட்டது. ஏன் தொடங்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும் என்று நான் நம்புகிறேன். இருந்தாலும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீட் என்ற ஒரு கொடுமையான சூழ்நிலையை ஏற்படுத்தி அதிலே படித்து வெற்றி பெற்றால்தான் மருத்துவராக முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.
தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தவரையில் நீட் தமிழ்நாட்டிற்குள் நுழையவிடவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மறைந்த ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சராக இருந்தவரையிலே, அந்த நீட் தமிழ்நாட்டிற்குள் நுழையவிடவில்லை. ஆனால் அவருடைய மறைவிற்கு பிறகு அ.தி.மு.க ஆட்சியில் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள், எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. காரணம், அவருடைய பதவி நிலைக்க வேண்டும். ஆகவே தன்னுடைய பதவிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அதை ஏற்றுக்கொண்டு நீட்டை தமிழ்நாட்டிற்குள் நுழையவிட்டார்கள். அதனால்தான் நம்முடைய மாணவச் செல்வங்கள் ஏழைக் குடும்பத்தில் பிறந்திருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள், நடுத்தரக் குடும்பத்தில் பிறந்திருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள் அதிர்ச்சியடைந்து அவர்கள் அதிகமான மதிப்பெண்ணைப் தேர்வில் பெற்றாலும், நீட்டிலே வெற்றி பெற முடியாது என்று எண்ணி நம்முடைய மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடக்கூடிய நிலை நாட்டிலே ஏற்பட்டிருக்கிறது.
அதில் முதல் மாணவியாக அரியலூர் பகுதியைச்சார்ந்த தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த அனிதா என்ற நம்முடைய அருமை சகோதரி பள்ளிக்கூடத்தில் படிக்கிறபோது நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்தவர்தான். அவர் இந்த நீட் தேர்விலே வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டு மாண்டார். அவருடைய நினைவாகத்தான் நம்முடைய கொளத்தூர் தொகுதியிலே அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என தொடங்கி அதன் மூலமாக மாணவச் செல்வங்களுக்கு முறையான பயிற்சியை வழங்கி, அதன் மூலமாக வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி அந்தப் பணியை இன்றைக்கு சிறப்பாக நம்முடைய தொகுதியைப் பொறுத்தவரைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை ஒவ்வொரு ஆண்டும் நான் இந்த பயிற்சிக்கு வரும்பொழுது சொல்வதுண்டு. நாடு முழுவதும் கொண்டு வரவேண்டும். ஏன் நம்முடைய கொளத்தூரில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா தொகுதிக்கும் இதை கொண்டு வரவேண்டும் என்று நான் அடிக்கடி சொன்னதுண்டு.
எதிர்க்கட்சியாக இருந்தபொழுது நான் இந்தப் பணியை மேற்கொண்டு இதில் வெற்றியைப் பெற்றேன். எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுது நன்றாக கவனிக்க வேண்டும். அப்போது நாம் ஆட்சியில் இல்லை. ஆனால் இப்பொழுது ஆட்சிக்கு வந்த பிறகு நான் எதிர்க்கட்சியாக இருந்து தொடங்கிய பணி தான், இன்று "நான் முதல்வன்" என்ற அந்த பெயரிலே ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறேன். “நான் முதல்வன்”, நான் மட்டுமல்ல, எல்லோரும் முதல்வன், இங்கே இருக்கக்கூடிய அத்தனை பேரும் முதல்வனாக வரவேண்டும். எல்லாவற்றிலும் முதல்வனாக வரவேண்டும். ஆட்சியில் மட்டுமல்ல, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், எல்லாத் துறைகளிலும் முதல்வனாக வரவேண்டும் என்பதற்காகத்தான் “நான் முதல்வன்” என்ற பெயர் சூட்டி, அந்தத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும், இன்னும் வெளிப்படையாக சொன்னால், “நான் முதல்வன்” என்கிற திட்டத்தைத் தொடங்குவதற்கு மூலகாரணமே இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தான் என்பதை பெருமையோடு சொல்கிறேன்.
இந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தில் இருக்கக்கூடிய எல்லாத் துறைகளையுமே அதில் ஈடுபடுத்தி, “நான் முதல்வன்” என்ற திட்டத்தை நடத்தக்கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அப்படிப்பட்ட நிலையிலே தான் இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் இது வரை இளம் பெண்கள் 7 பிரிவுகளில் (batch) 515 பேர்களுக்கு மடிக்கணினியும், சான்றிதழ்களும் ஏற்கனவே பெற்றிருக்கிறார்கள். இளைஞர்கள் 3 பிரிவுகளில் (batch) 236 பேர்கள் மடிக்கணினியும், சான்றிதழ்களும் ஏற்கனவே பெற்றிருக்கிறார்கள்.
இன்று இளம்பெண்கள் 152 பேர்கள், இளைஞர்கள் 71 பேர்கள், 64 மடிக்கணினியும், சான்றிதழ்களும் பெற இருக்கிறார்கள். மடிக்கணினியும், சான்றிதழ்களும் பெற இருக்கக்கூடிய அத்தனை பேரையும் நான் இந்தத் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்ல, தமிழகத்தின் முதல்வராக மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக மட்டுமல்ல, எல்லாத்தையும் விட உங்களில் ஒருவனாக அத்தனை பேரையும் நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். ஆகவே இன்னும் பல வெற்றிகளை நீங்கள் பெறவேண்டும் என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி நான் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அதனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மானியக் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே, நாளை, நாளை மறுநாள் விடுமுறையாக இருந்தாலும், நாளைய தினம் நான் கேரள மாநிலத்திற்கு நிகழ்ச்சி ஒன்றிற்காக செல்கிறேன்.
தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த மானியக் கோரிக்கை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொள்வதற்காக இப்போது இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்லாமல் நேராக கோட்டைக்குத்தான் செல்கிறேன். அங்கே இருக்கக்கூடிய அதிகாரிடத்தில், அமைச்சரிடத்தில் ஆய்வு நடத்தி வர இருக்கக்கூடிய மானியக் கோரிக்கைகள் எல்லாம் சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும், திட்டமிட்டு பணியாற்றவேண்டும், முறைபடுத்த வேண்டும் என்பதற்காக நான் போக வேண்டும். அதனால்தான் அதிக நேரம் உங்களிடத்திலே பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாலும், இன்றைக்கு உங்கள் மூலமாக இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதில் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். என்றைக்கும் உங்களுக்கு பக்கபலமாக நாங்களும் இருப்போம், நீங்களும் இருக்கவேண்டும் என்று கேட்டு, இந்த சிறப்பான நிகழ்ச்சியை அமைத்து தந்திருக்கக்கூடிய அன்பிற்கினிய இந்த அகாடமியின் நிர்வாகிகளாக இருக்கக்கூடிய திருமதி ஹெலன் அவர்களுக்கும், சகோதரர் நரேந்திரன் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறப்பாக ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு திட்டமிட்டு, வெற்றி காணக்கூடியவர் தான் நம்முடைய அமைச்சர் சேகர்பாபு. அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அரசாங்க நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, திருமண நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இதுபோன்று உங்களையெல்லாம் அழைத்து உட்கார வைத்து நடத்தக்கூடிய நிகழ்ச்சியாக இருந்தாலும், எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முத்திரைப் பதிக்கக்கூடிய ஒரு செயல் வீரராக விளங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.” இவ்வாறு உரையாற்றினார்.
இறுதியாக நன்றி தெரிவித்து கல்லூரி மாணவி லட்சுமி பேசுகையில், "மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. நீங்கள் ஒரு பெரிய வாய்ப்பை அனைத்து மாணவர்களுக்கும் உருவாக்கி கொடுத்திருக்கிறீர்கள். முதலில் நேர்முகத் தேர்விற்கு போனால் எல்லோருக்கும் Tally தெரியுமா? என்று கேட்கிறார்கள். நீங்கள் நல்ல ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்க வாய்ப்பை கொடுத்திருக்கிறீர்கள். மடிக்கணினிகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கியமைக்காக உங்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.