திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் கிருஷ்ணன் (15) அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் மணப்பாறையை அடுத்த செட்டியபட்டியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவரிடம் ராமலிங்கம் கடன் வாங்கியுள்ளார். இதில் வட்டிக்கு மேல் வட்டி கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ராமலிங்கத்தின் இருசக்கர வாகனத்தை வெள்ளையம்மாள் எடுத்துச் சென்றுள்ளார். கடந்த மார்ச் 21ஆம் தேதி வெள்ளையம்மாள் வீட்டிற்கு சென்ற ராமலிங்கத்தின் மகன் கிருஷ்ணன் தங்களது வாகனத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார்.
அப்போது வெள்ளையம்மாளுடன் இருந்த பச்சமுத்து என்பவர் அரிவாளால் கிருஷ்ணனை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன், திருச்சி மருத்துவனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தசம்பவத்தைத் தொடர்ந்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து பச்சமுத்து மற்றும் தலைமறைவாக இருந்த வெள்ளையம்மாளை போலிஸார் கைது செய்தனர். தந்தை வாங்கிய கடனுக்காக மகனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.