தமிழ்நாடு

”இந்தியாவின் திசையை தீர்மானிக்கும் திராவிடச் சூரியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” - ப.திருமாவேலன்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் கிடைத்த வரவேற்பு குறித்து மூத்த ஊடகவியலாளர் ப.திருமாவேலனின் சிறப்பு கட்டுரை முரசொலி நாளேட்டில் வெளியாகியுள்ளது.

”இந்தியாவின் திசையை தீர்மானிக்கும் திராவிடச் சூரியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” - ப.திருமாவேலன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மார்ச் 31- பழைய நிதி ஆண்டு முடிந்து புதிய நிதியாண்டு தொடங்கும். அரசியலைப் பொறுத்தவரையில் மார்ச் 31 புதிய ஸ்டாலினாண்டு இந்திய அரசியலில் தொடங்கி இருக்கிறது. நோக்கும் திசையெல்லாம் திராவிடச் சூரியனின் ஒளிப்பரவல். பலருக்கும் அது இதமாக இருக்கிறது. சிலருக்கு எரிச்சலாக இருக்கிறது.

டெல்லிக்கு வந்தார். பிரதமரைச் சந்தித்தார். புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார் என்பதோடு முடிந்துவிடவில்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் டெல்லிப் பயணம். டெல்லிக்கு வந்தார், இந்தியாவுக்கான புதிய அரசியலைத் தீர்மானிக்கும் திசையைக் காட்டிவிட்டுச் சென்றார் என்கிற அளவுக்கு அந்தப் பயணம் அமைந்துவிட்டது.

பிரதமரைச் சந்திக்கவே நாடாளுமன்ற வளாகத்துக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்தார். அவர் வந்திருக்கிறார் என்றதும், காங்கிரஸ் தலைவர் சோனியாவே, அவர் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டார். ‘வணக்கம் வைத்துவிட்டுச் செல்லலாம் என்று வந்தேன்' என்றார் சோனியா. எதிரே குறுக்கிடுகிறார் பா.ஜ.க. தலைவர் நட்டா. அவரும் கைகுலுக்கி நட்பை பரிமாறிக் கொள்கிறார்.

இந்தியாவின் இரு துருவமும் ஒரு துருவத்தை வணங்கிய காட்சி அது. தலைவரைப் பார்த்தால் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர்ச்சி அடைவதில் ஆச்சர்யம் இல்லை. சட்டமன்றமே, நாடாளுமன்றத்துக்குள் வந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடையலாம். ஆனால் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கி வந்தார்கள். கை குலுக்கினார்கள். செல்பி எடுத்துக் கொண்டார்கள்.

”இந்தியாவின் திசையை தீர்மானிக்கும் திராவிடச் சூரியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” - ப.திருமாவேலன்

‘எங்கள் மாநிலத்துக்கும் வாருங்கள்' என்றார்கள். ‘உங்கள் மாநிலத்துக்கு நாங்களும் வருகிறோம்' என்றார்கள். ‘உங்களது சிறப்பான ஆட்சியைப் பற்றி எங்கள் மாநிலமும் அறியும்' என்றார்கள். இவை எல்லாம் யாரும் எதிர்பாராத காட்சிகள். முதலமைச்சரே கூட இதனை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் நல்லாட்சி நடத்துகிறார், சிறப்பாகப் பணியாற்றுகிறார், அனைத்து மக்களின் நம்பிக்கையும் பெற்றுள்ளார் என்பது மட்டுமே அகில இந்தியாவைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் மனதை மாற்றி இருக்கலாம் என்று நினைத்தால் அது முழுமையான சரியான பதிலாக இருக்க முடியாது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக எல்லையைத் தாண்டிய ஒரு சிந்தனையை உருவாக்குகிறார் என்பதுதான் அவர்களது வரவேற்புக்கு அடிப்படைக் காரணம். தமிழக எல்லையைத் தாண்டிய ஒரு தேவைக்கு அவர் வழிகாட்டியாக அமைகிறார் என்பதால்தான் அனைத்து மாநில உறுப்பினர்களாலும் அவர் வரவேற்கப்பட்டார்.

வரவேற்கப்பட்ட இடம் என்பது நாடாளுமன்றத்தின் மைய மண்டபம் ஆகும். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாற்றுக் கட்சித் தலைவரை, தனியாகச் சந்திப்பதில் ஆச்சர்யம் இல்லை. நாட்டுக்குப் பொதுவான இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கான பெருமையைக் கொடுத்ததுதான் முக்கியமானது. ஏனென்றால் இந்திய நாட்டுக்குப் பொதுவான அரசியலைப் பேசுகிறார் அவர் என்பதுதான் அதற்குக் காரணம்.

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி என்பது இந்தியாவின் திசையைத் தீர்மானித்துச் சொல்லும் பேட்டியாக அமைந்திருந்தது. முந்தைய நாள் பிரதமர், ஒன்றிய அமைச்சர்களைச் சந்தித்துவிட்டு வந்தும் பிந்தைய நாள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்க இருப்பதற்கு முன்பும் முதலமைச்சர் இத்தகைய பேட்டியைக் கொடுத்தார்.

"ஒற்றுமைதான் பலம் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணரவேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற அனைவரும் ஒன்று சேர்ந்தாக வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மை - கூட்டாட்சித் தத்துவம் - ஜனநாயகம் - மதச்சார்பின்மை - சமத்துவம் - சகோதரத்துவம் - மாநில உரிமைகள் - கல்வி உரிமைகள் ஆகிய அனைத்தையும் காப்பாற்ற வேண்டுமானால் அரசியல் மனமார்ச்சர்யங்களை விட்டு அனைவரும் ஒன்றாக வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்" என்பதுதான் துன்பம் சூழ்ந்த காலத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியாவுக்குக் காட்டிய திசையாகும்.

காங்கிரஸ் கட்சியை மையப்படுத்தி பல கேள்விகள் தலைவரிடம் கேட்கப்பட்டது. அவர்களுக்கும் மிக அழுத்தமான வழியைக் காட்டி இருக்கிறார். "தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி ஓரணியில் வைத்துள்ளோம். நாங்கள் அனைவரும் தேர்தல் காலத்தில் மட்டும், தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்ளும் கட்சிகளாக இல்லாமல், கொள்கை உறவாக தொடர்ந்து வருகிறோம். அதுதான் எங்களது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

அத்தகைய கொள்கைப்பூர்வமான நட்புறவை அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி உருவாக்க வேண்டும் என்பது எனது விருப்பம்" என்பது தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டிய நல்வழியாகும். காங்கிரஸ் அல்லாத அணியைப் பற்றி பி.டி.ஐ. செய்தியாளர் கேட்கிறார். “There is an argument as made by Mamata Banerjee that regional parties should take lead in closing ranks against the BJP due to the Congress' decline. Your take? என்று கேட்கிறார்.

"இந்தக் கருத்து சில மாநிலங்களுக்கு சரியாக இருக்கலாம். பல மாநிலங்களில் திசை திருப்பலாக அமையும். என்னைப் பொறுத்தவரையில் பா.ஜ.க.வை எதிர்க்கும் மாநிலக் கட்சிகளும் காங்கிரஸும், இடதுசாரிகளும் இணைந்து பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைத்தாக வேண்டும்" என்கிறார் தலைவர்.

இந்தியாவின் முக்கியக் கட்சியின் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைவர் மு.க.ஸ்டாலினை நோக்கி ஈர்க்கப்படுவதற்கு இதுதான் முக்கியமான காரணமாகும். அந்தப் பேட்டி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்பதன் அடையாளம்தான் அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை நோக்கி அகில இந்தியாவே வந்ததாகும்.

சோனியா காந்தி (காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு), அகிலேஷ் (சமாஜ்வாடி), மௌவா மொய்த்ரா உள்ளிட்ட மூன்று எம்.பி.கள் (திரிணாமூல் காங்கிரஸ்), அமர் பட்நாயக் (பிஜூ ஜனதா தளம்), மனோஜ் ஜா (ராஷ்ட்ரிய ஜனதாதளம்), ஹர்சிம்ரத் கவுர் (சிரோன்மனி அகாலிதளம்), ரவீந்திர குமார் உள்ளிட்ட மூன்று எம்.பிகள் (தெலுங்கு தேசம்), நவாஸ் கனி (முஸ்லீம் லீக்), வைகோ (ம.தி.மு.க.), தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்) என இந்திய வரைபடம் முழுக்க அந்த அரங்கில் நுழைந்திருந்தது.

அது ஒரு கட்சியின் அலுவலகமாக இல்லாமல், புதிய இந்தியாவின் கொள்கையை வழிநடத்தும் கலங்கரை விளக்கமாக அமையப் போகிறது என்பதை நாம் சொல்லவில்லை, அவர்கள் சொல்கிறார்கள். அப்படி அமையவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பிரதமருடனான சந்திப்பு என்பது முதலமைச்சர் என்ற முறையிலானது. ஒன்றிய அமைச்சர்கள், முதலமைச்சருக்கு கொடுத்த வரவேற்பு என்பதும் மகத்தானது. வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பிய காட்சி என்பது, ஒரு முதலமைச்சர் என்ற எல்லையைத் தாண்டிய மரியாதையாக அமைந்திருந்தது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு மணிநேரத்துக்கு மேல் முதலமைச்சருடன் இருந்தார். ‘இவரைத் தெரியுமா?' என்று மாணவர்களிடம் அவரே கேட்டார். வகுப்பறைகளில் டெல்லி முதலமைச்சருடன் சேர்ந்து, தமிழக முதலமைச்சர் படத்தையும் பலகையில் வரைந்து வைத்திருந்தார்கள். இவை எல்லாம் சாதாரணமாக நடந்துவிடவில்லை. நடக்கவும் செய்யாது. பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களுடனான சந்திப்பு என்பது, உரிமைக்குகுரல் கொடுப்பதாக அமைந்திருந்தது.

சோனியா உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கி வந்தது என்பது உறவுக்கு கைகொடுப்பதாக அமைந்திருந்தது. இனி இந்தியாவின் திசை தீர்மானிக்கும் சூரியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான். சூரியனுக்கு ‘சிக்னல்' கிடையாது!

banner

Related Stories

Related Stories