கோவை மாவட்டம் தரணி நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சமையலராக வேலைப்பார்த்து வருகிறார். தன்பாலின ஈர்ப்பாளரான இவர், சில ஆன்லைன் செயலி மூலம் துணைத் தேடியுள்ளார்.
இந்நிலையில், கங்காதரனை செயலியில் உறுப்பினராக உள்ள இவருக்கு வாலிபர் ஒருவர் தொடர்புக்கொண்டு, நேரில் சந்திக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். அந்த வாலிபரின் பேச்சை நம்பி, சாய்பாபா காலனி ரயில்வே தண்டவாள பகுதிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த மூன்று வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரின் ஆடையைக் கழற்றி வீடியோ எடுத்துள்ளனர். மேலும் அந்த வீடியோவை இணைத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டி பணம் பறித்துள்ளனர். அதுமட்டுமல்லாது அவரிடமிருந்து செல்போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அந்த இளைஞர் சாய்பாபா காலனி போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவானந்தா காலனி காந்தி நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பிரசாந்த்(21) நிஷாந்த் (21) மற்றும் மாணிக்கம் (20) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலிஸார் கல்லூரி மாணவர் பிரசாந்த் மற்றும் நிசாந்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மாணிக்கத்தை போலிஸார் தேடி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், தன்பாலின ஈர்பாளர்களை குறி வைத்து அவர்களிடம் மோசடியில் ஈடுபட்டு பணம் மற்றும் செல்போன் பறிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் தெரியவந்தது.
அதுமட்டுமல்லாது கடந்த மாதம் ஆந்திராவில் நபர் ஒருவரிடம் பணம் செல்போன் பறித்து இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலிஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.