ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி. உலர் பழங்களை விற்பனை செய்து வரும் இவர் தனது தொழிலை விரிவு படுத்துவதற்காகக் கடன் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அவரது செல்போனுக்கு ஒரு SMS வந்துள்ளது. இதில் கடன் தருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனே அவர் அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
அப்போது எதிர்முனையில் பேசிய நபர் தன்னை கவுதம் என்றும் ரூ.1 கோடி கடன் பெற்று தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இதற்காக ரூ.10 லட்சம் கமிஷன் கொடுக்க வேண்டும் எனவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
பின்னர் ரூ.1 கோடி கடன் கிடைக்கிறது என்ற ஆசையில் ஸ்ரீதேவியும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து தனது மகன் ரமணாவிடம் ரூ 10 லட்சம் பணத்தைக் கொடுத்து கோவைக்கு அனுப்பியுள்ளார்.
இவர் கோவை சென்று கவுதமை சந்தித்துள்ளார். அப்போது அவர் ஒரு அட்டைப் பெட்டியைக் கொடுத்து இதில் ரூ.1 கோடி இருக்கிறது எனக் கூறியுள்ளார். இதையடுத்து ரமணாவும் தான் எடுத்து வந்த ரூ.10 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.
அந்தப் பணத்தை வாங்கிய உடனே கவுதம் மற்றும் அவருடன் இருந்தவர்கள் உடனே அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டனர். பிறகு அந்த அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் ரூ.1 கோடி பணத்திற்குப் பதில் பிளாஸ்டிக் பொருள்கள் மட்டுமே இருந்தை கண்டு அதிர்ச்யிடைந்துள்ளார்.
பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஸ்ரீதேவி இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், மோசடியில் ஈடுபட்டு வந்தவர்கள் ஜனகன், அமல்ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.6 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் இதேபோன்று இவர்கள் இருவரும் பேறு யாரிடமாவது மோடி செய்துள்ளார்களா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.