பத்தாண்டுகளுக்கும் மேலாக சகோதரி மகளை சீரழித்த தாய்மாமன் உட்பட 12 பேர் மீது ராயபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிக்கு கடந்த 2000ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அண்ணாமலை 2009ஆம் ஆண்டே உயிரிழந்துவிட்டதால் தனது மகளை தனது சகோதரர் தேசப்பன் பொறுப்பில் விட்டுவிட்டு, சாந்தி வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.
தனது சகோதரி மகள் என்றும் பாராமல் சிறுமிக்கு தேசப்பன் தொடர்ந்து பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். பின்னர் சிறுமி 13 வயதில் பருவம் அடைந்தபின் அவரை தனது நண்பர்களுக்கும் தேசப்பன் விருந்து வைத்துள்ளார். இப்படியாக கடந்த 2020ம் ஆண்டு வரை சாந்தியின் மகளான இளம்பெண்ணை கடுமையாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
இதையடுத்து கடந்த 2020ல் தாய்மாமன் தேசப்பன் பிடியிலிருந்து தப்பிய அந்த இளம்பெண் பிராட்வே பேருந்து நிலையம் வந்துள்ளார். பிறகு குழந்தைள் நல அலகு மூலம் பெரவள்ளூர் காப்பகத்தில் தங்கி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் சிறுமியாக இருந்தது முதல் பருவம் அடைந்தது வரை தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து சமீபத்தில் சென்னை மாவட்ட குழந்தைகள் நல அலகிடம் இளம் பெண் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குழந்தைகள் நல குழு உறுப்பினர் லலிதா அளித்த புகாரின் பேரில் ராயபுரம் அனைத்து மகளிர் போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்படி இளம் பெண்ணின் தாயார் சாந்தி, தாய்மாமன் தேசப்பன், தாய்மாமன் மனைவி ரேவதி, சிறுமியை சீரழித்த சிவா உட்பட மூன்று பேர், இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி தெரிவித்தும் அவருக்கு உதவாத காப்பக நிர்வாகிகள் இசபெல், பாத்திமா, சுகந்தி ,பிரசன்னா அலெக்சாண்டர் , ஜோஸ்பின் என மொத்தம் 12 பேர் மீது ராயபுரம் அனைத்து மகளிர் போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் தாய் சாந்தி, தாய்மாமன் மனைவி ரேவதி, இசபெல் சுகந்தி, பிரசன்னா, அலெக்சாண்டர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.