முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் பயணம் மேற்கொண்டதை கொச்சைப்படுத்தி, உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேசிய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும் இல்லையென்றால் நஷ்ட ஈடு கேட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
அதுகுறித்துப் பேசிய அண்ணாமலை, “தி.மு.க அரசுக்கு திராணி இருந்தால் என்னைக் கைது செய்யட்டும். நான் அடுத்த ஆறு மணி நேரம் பா.ஜ.க அலுவலகத்தில்தான் இருப்பேன்.” எனவும் ஆர்.எஸ்.பாரதி, பி.வில்சன் ஆகியோர் குறித்தும் கடுமையாகப் பேசினார்.
அவருக்கு பதிலளிக்கும் வகையில் இன்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியல் பக்குவமில்லாமல் பேசிவருகிறார் அண்ணாலை. அவர் பொறுப்புடன் பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய ஆர்.எஸ்.பாரதி எம்.பி, “தி.மு.கவை தொடர்ந்து திட்டிப் பேசினால் பா.ஜ.கவில் பதவி கிடைக்கும் என்கிற ஆசையில் தொடர்ந்து இவ்வாறு பேசுகிறார் அண்ணாமலை.
நீங்கள் என்னென்ன செய்தீர்கள், யாரையெல்லாம் ப்ளாக்மெயில் செய்தீர்கள் குறித்த பட்டியல் என்னிடம் இருக்கிறது. நான் சொல்வதை உங்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றால் என் மீது வழக்கு தொடருங்கள். நீதிமன்றத்தில் நிரூபிக்கிறேன்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பதற்கு தமிழ்நாட்டில் இருந்து அன்றைய ஆட்சியாளர்கள் மூலமாக எவ்வளவு பணம் சென்றது என்கிற விவரங்கள் எங்களுக்குத் தெரியும். அப்போது நீங்கள் அங்கு காவல்துறை அதிகாரியாக இருந்தீர்கள். எனவே கொஞ்சம் எச்சரிக்கையோடு இருங்கள்” என சவால் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “முதல்வரும், அவருடன் சென்றவர்களும் கோடி கோடியாகப் பணம் கொண்டு சென்றிருந்தால் ஒன்றிய அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியது தானே? அந்த அதிகாரம் ஒன்றிய அரசுக்கு இருக்கிறதே?
யாரை ஏமாற்ற நினைக்கிறார் அண்னாமலை? தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கெல்லாம் அரசியல் புரியாது என நினைத்துக் கொண்டிருக்கிறாரா?” எனச் சாடினார்.