தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி அருள் பிரசாத் என்பவர் முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களைப் பரப்பியுள்ளார். அதில், துபாய் செல்லும் போது முதல்வர் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி என நிதியமைச்சர் பி.டி.ஆர் தகவல் என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து நிதியமைச்சர் பெயரில் அவதூறு பரப்பிய அருள் பிரசாத் மீது போலிஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இது குறித்து நிதியமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பதிவில்,"காவல்துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பிப்பாக இருக்கலாம். வடிகட்டப்பட்ட முட்டாள் இது போன்ற முட்டாள்தனத்தை வெளிப்படையாக இடுகையிடுவதால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை" என தெரிவித்துள்ளார்.