கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் உதயா. இளைஞரான இவர் டுகாட்டி என்ற ரேஸ் பைக் ஒன்றை வைத்திருந்தார். இந்த வாகனத்தில் சிறிய பழுது ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பழுதை சரிசெய்வதற்காக அதே இருசக்கர வாகனத்தில் நெல்லைக்குச் சென்று கொண்டிருந்தார். வாகைகுளம் நான்கு வழிச்சாலை பாலம் அருகே சென்றபோது அவருக்கு முன்பாக டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது, உதயா டிராக்டரை முந்திச் செல்ல முயற்சித்தபோது திடீரென இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் வேகமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்துடன் உதயா தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் வாலிபரும் தீயில் சிக்கிக்கொண்டார். இதனால் உதயா உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் வாலிபர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற டிராக்டர் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். ரேஸ் பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.