உலக அளவில் பத்திரிகை புகைப்பட கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக வேர்ல்ட் பிரஸ் போட்டோ அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் World Press Photo Awards வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இந்த விருதுக்கு மதுரையைச் சேர்ந்த செந்தில் குமரன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக விருது பெறும் நபர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
இந்த விருதுக்கான தேர்வில் 130 நாடுகளிலிருந்து 4800 புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பல்வேறு பிரிவுகளில் தேர்வுகள் நடைபெற்றுள்ளது. இவற்றில் செந்தில் குமரன் நீண்ட கால திட்டங்கள் என்ற பிரிவின் கீழ் 10 ஆண்டுகளாக புலிகளுக்கும் மனிதனுக்குமான வாழ்வியலை புகைப்படமாக பதிவு செய்துள்ளார். இதற்காகவே இவருக்கு World Press Photo Awards கிடைத்துள்ளது. ஆசியக் கண்டத்தின் சார்பில் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து செந்தில் குமரன், "நான் புகைப்படத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறேன். புகைப்படங்கள் என்பது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், நம் சிந்தனைகளை வெளிப்படுத்தும் பொருளாக இருக்கவேண்டும் என்பது என் ஆசை என்பதால் புலிகளுக்கும் மனிதனுக்குமான வாழ்வியல் சூழலை புகைப்படங்களாகக் காட்சிப்படுத்தினேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விருது பெறும் செந்தில் குமரனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் மூத்த புகைப்பட கலைஞர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் உலக அளவிலான விருக்கு மதுரையை சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அம்மாவட்ட மக்களை மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செந்தில் குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், "World Press Photo அமைப்பின் பத்திரிகை புகைப்படக் கலைஞருக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள மதுரை புகைப்பட கலைஞர் செந்தில் குமரனுக்கு வாழ்த்துக்கள் மனித - வன விலங்கு மோதலை வெளிக்கொண்டு வரும் இவரது படைப்புகள் அனைவரது கவனத்தையும் பெற வேண்டியவை" எனப் பதிவிட்டுள்ளார்.
நெதர்லாந்தில் ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெறும் விழாவில் செந்தில் குமரன் World Press Photo Awards விருதைப் பெறவுள்ளார். இவர் நேஷனல் ஜியாகிரபிக் உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.