சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக உள்ளார் ரம்யா பாரதி ஐ.பி.எஸ். இந்நிலையில் இரவு நேர ரோந்துப்பணி மேற்கொள்ளும் காவலர்களைச் சைக்கிளில் சென்று ரம்யா பாரதி ஆய்வு செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இவர் இரவு 2.45 மணிக்கு சைக்கிளில் தனது ஆய்வுப் பணியைத் துவங்கினார். தனது காவல் நிலைய எல்லைக்குட்டபட்ட பகுதிகளைச் சைக்கிளிலேயே சென்று ஆய்வு செய்தார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், பீட் அதிகாரிகள் உள்ளிட்ட பணியில் ஈடுபடும் காவலர்களின் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அதேபோல், இரவு நேரத்தில் சாலையிலிருந்த பொதுமக்களிடமும் அவர் கருத்துகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுப் பணியை காலை 4.15 மணிக்கே முடித்துள்ளார். கிட்டத்தட்ட 9 கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிளிலேயே சென்று ரம்ய பாரதி ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ஆய்வு செய்யும் படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் காவல் இணை ஆய்வாளர் ரம்யா பாரதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன். தமிழ்நாடு காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும்." எனத் தெரிவித்துள்ளார்.