ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சுண்டைப்போடு கிராமத்தைச் சேர்ந்த உடுமுட்டி – பசுவி தம்பதிக்கு 11 குழந்தைகள். சோளகர் எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர்களுக்கு ஐந்தாவதாகப் பிறந்தவர் உ.சந்திரன்.
இதில், சந்திரன் மட்டும் கோபி வைரவிழா மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 வகுப்பில், வேளாண்மைச் செயல்பாடுகள் என்ற தொழிற்பாடப்பிரிவில் 600-க்கு 444 மதிப்பெண் பெற்றுள்ளார். அதன்பின், இளம் அறிவியல் பட்டப்படிப்பில் சேர தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கும், கால்நடை மருத்துவப் படிப்பில் சேர தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கும் 2019-ல் விண்ணப்பித்துள்ளார்.
இதில், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் வெளியிட்ட தொழிற்பாடப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியலில், இட ஒதுக்கீட்டுத் தரவரிசையில், பழங்குடியினப் பிரிவில் முதல் இடம் கிடைத்தது. ஆனால், கலந்தாய்வில் பங்கேற்க இவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பெற்றும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததால், சந்திரனுக்கு கால்நடை மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனிடையே கடந்த 2019ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவரை நேரில் சந்தித்து கனிவோடு விசாரித்து கல்லூரியில் சேர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும் இந்தப் பிரச்சனையில் சென்னை உயர்நீதிமன்றம், தேசிய மனித உரிமை ஆணையம் என பல்வேறு இடங்களில் முறையிட்டும் சந்திரனின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்நிலையில், பழங்குடி மாணவர் சந்திரன் மீண்டும் இவ்வாண்டும் கால்நடை மருத்துவப் படிப்பிற்கும், வேளாண்மை பாடப் பிரிவிற்கும் விண்ணப்பித்துள்ளர்.
இந்நிலையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து மாணவன் சந்திரனுக்கு வேளாண்மை பாடப்பிரிவில் (சுயநிதி) இடம் ஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான தகவலை கேட்டு மாணவர் சந்திரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பன்னிரெண்டாம் வகுப்பில் தொழிற்பாட பிரிவு பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 5% இடஒதுக்கீடு உண்டு. ஆனால் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கீழ் உள்ள 28 சுயநிதிக் (தனியார்) கல்லூரிகளில் 5% கடைபிடிப்பதில்லை.
சந்திரன் மற்றும் சந்திரனைப் போன்ற பல மாணவர்கள் பயன் பெறும் வகையில் தனியார் கல்லூரிகளிலும் 5% இடங்களை ஒதுக்கீடு செய்ய அரசாணையை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் இவ்வாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழிப்பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு சந்திரன் ஒரு மிக முக்கியமான காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.