தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இரண்டாவதுமுறையாக முழு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணி முதல் தாக்கல் செய்து பேசினார்.
1. குறுவைப் பருவத்தில் மாற்றுப் பயிர் சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பு:
கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் நெல் பயிருக்கு மாற்றாக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 66 ஆயிரம் ஏக்கரில் மாற்றுப்பயிர் சாகுபடி 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
2. நெல்லுக்குப் பின் பயறு சாகுபடி
நெல் அறுவடைக்குப்பின், பயறுவகைகள் சாகுபடியினை ஊக்கப்படுத்த ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் கூடுதலாக 13 ஆயிரம் மெட்ரிக் டன் பயறு உற்பத்தி செய்யப்படும்.
நெல்லில் உற்பத்தித்திறனை அதிகரிக்க, குழித்தட்டு முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்யும் புதிய தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும். இதற்காக மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் மாநில அரசு விதைப் பண்ணையில் குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்து, 250 ஏக்கரில் செயல்விளக்கத் திடல் அமைக்கப்படும்.
இயற்கை வழியில் பூச்சி நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், கூடுதல் வருமானம் பெற்றிடவும், ஐந்து இலட்சம் ஏக்கர் பரப்பில் வரப்புப் பயிர் சாகுபடி செய்திட பயறு விதைகள் மானியத்தில் வழங்கப்படும். இத்திட்டம் மூன்று கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். நெல்லில் கூடுதல் விளைச்சல் பெறுவதற்காக துத்தநாக சல்பேட், ஜிப்சம் தலா ஒரு இலட்சம் ஏக்கர் பரப்பிற்கு ஐந்து கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.
3. உழவர் பெருமக்களுக்கு வேளாண் கருவிகள் வழங்குதல்
விவசாயப் பெருமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள “வேளாண் கருவிகள் தொகுப்பு”, 2022-23 ஆண்டிலும் அரை இலட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு 15 கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.
4. வேளாண்மையில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிகளுக்குப் பரிசு
இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, புதிய உள்ளூர் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளை இந்த அரசு தொடர்ந்து ஊக்குவித்து, பரிசு அளிக்கும், பாராட்டி மகிழும்.
5. ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம்.
இவ்வரசினால் செயல்படுத்தப்படும் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்குத்தொகையினை குறைத்து உதவிடும் வகையில், நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும். இதற்கென 2022-23ஆம் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
6. கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை
கரும்பு விவசாயிகள், விவசாய சங்கங்களின், கரும்பு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து, கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், சென்ற ஆண்டினைப் போலவே, 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக கரும்பு டன் ஒன்றிற்கு 195 ரூபாய் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.
7. அரசு மாணவியர் விடுதிகளில் தோட்டம் அமைத்தல்!
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மாணவியர் விடுதிகளிலும் காய்கறி, பழங்கள், மூலிகைச் செடிகளுக்கான தோட்டம் அமைக்கப்படும். இத்தோட்டங்கள் பழங்கள், காய்கறிகள், மூலிகைச் செடிகளை, மாணவிகள் கண்டறியவும், சாகுபடி முறைகள், அவற்றிலுள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி அறிந்துகொள்ளவும் உதவும்.
இத்திட்டத்தின் மூலம் பழச்செடிகள், மூலிகைச் செடிகள், தென்னங்கன்றுகள், காய்கறி விதைகள், தோட்டக்கருவிகள் உள்ளிட்ட இதர இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு விடுதி ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் 200 விடுதிகளுக்கு முழு மானியத்தில் 20 இலட்சம் ரூபாய் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
8. ஆரோக்கியத்தின் அவசியம் மூலிகை தோட்டங்கள்!
உணவே மருந்து என்பதற்கும், மருந்தே உணவு என்பதற்கும் பண்டைக் காலத் தமிழர்களின் வாழ்வையும் தமிழ் மருத்துவத்தின் அடிப்படையையும் சான்றாகக் கூறலாம். 2022-23 ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மூலிகை தோட்டங்கள் நான்கு ஆயிரம் வீடுகளில் அமைக்கப்படும். இதற்கு தேவையான மூலிகைச்செடிகள், அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்படும்.
9. கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் வழங்குதல்
விவசாயிகள் இரவு நேரங்களில் வயல்களுக்கு நேரில் சென்று பம்புசெட்டுகளை இயக்கும் பொழுது ஏற்படும் பாம்புக்கடி, காயமடைதல் போன்ற இடர்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டும், விவசாயியின் பாசன வயலிலுள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்புசெட்டுகளைத் தொலைவில் இருந்து
கைபேசியின் மூலம் இயக்கிடும் வகையிலும் கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவிகள், 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் மானியத்தில் வழங்க 2022-23 ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுள்ள 3 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி வழங்கப்படும்.
10. இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு
இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக, இந்த அரசு சென்ற வேளாண் நிதிநிலை அறிக்கையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதனைத் தொடர்ந்து, 2022-23 ஆம் ஆண்டில் ஆரோக்கியமான வாழ்விற்கு நஞ்சற்ற, நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்திட இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கு நான்கு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பசுந்தாள் உர விதைகளும், மண் புழு உரம், அமிர்தக் கரைசல் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள உழவர், உழவர் உற்பத்தியாளர், பாரம்பரிய இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டத்திலுள்ள 100 குழுக்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நிதியுதவியும் வழங்கப்படும். இது தவிர, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து 150 இயற்கை வேளாண்மைத் தொகுப்புகள் ஏழு ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கிட ஐந்து கோடி ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.