மதுரவாயல் அருகே உணவு டெலிவரி செய்ய வந்த ஊழியரை வாடிக்கையாளர் தவறாக பேசியதாக சக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் பிரசாந்த் ஜாய் என்பவர் ஸ்விகியில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஸ்விக்கி ஊழியர் சின்ராசு உணவு டெலிவரி செய்ய அங்கு சென்றுள்ளார்.
அப்போது ஸ்விகி ஊழியரை பைக்குடன் உள்ளே அனுமதிக்க மறுத்து அடுக்குமாடியின் காவலர் தடுத்துள்ளார். இதையடுத்த சின்ராசு வாடிக்கையாளரை தொலைபேசியில் அழைத்து நடந்ததை கூறியுள்ளார்.
இதனால், “நீங்களே வந்து உணவைப் பெற்றுக் கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார். உடனே அழைப்பை துண்டித்த வாடிக்கையாளர் பிரசாத் சாய் வெளியே வந்து சின்ராசுவை தகாத வார்த்தைகளால் மரியாதைக்குறைவாகத் திட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்த, சின்ராசு இதுதொடர்பாக சக ஊழியர்களை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு வந்த ஸ்விகி ஊழியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அடுக்குமாடி குடியிருப்பு முன்பு கூடினர்.
தகாத வார்த்தையில் பேசிய வாடிக்கையாளர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அவர்கள் இதுதொடர்பாக மதுரவாயல் போலிஸாருக்கும் தகவல் அளித்தனர்.
அங்கு வந்த போலிஸார் அந்த வாடிக்கையாளரிடம் விசாரிக்கச் சென்றபோது அவர் வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மேற்கொண்டு உரிய விசாரனை நடத்தப்படும் என போலிஸார் உறுதியளித்ததை தொடர்ந்து ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.