இந்தியா

"சகிப்புத்தன்மை குறித்து யார் பாடம் எடுப்பது?” : Zomato நிறுவனரின் ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை!

சகிப்புத்தன்மை வேண்டும் என்கிற ரீதியில் சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் பதிவிட்ட ட்விட்டர் பதிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"சகிப்புத்தன்மை குறித்து யார் பாடம் எடுப்பது?” : Zomato நிறுவனரின் ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் நேற்று சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தார். ஆனால், அவருக்கு உணவு முழுமையாகக் கிடைக்கவில்லை. இதையடுத்து சொமேட்டோ நிறுவனத்தின் கஸ்டமர் கேரில் புகார் அளித்தார்.

அப்போது, “மொழிப் பிரச்சனையால் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்திடம் இது குறித்துக் கேட்க முடியவில்லை” என சொமேட்டோ சேவை மைய அதிகாரி கூறியுள்ளார். இதையடுத்து விகாஷ், “தமிழ்நாட்டில் சொமெட்டோ செயல்பட்டால், அங்கு வாழும் மக்களின் மொழியை அறிந்தவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்” என கூறியுள்ளார்.

அதற்கு சொமேட்டோ ஊழியர், “இந்தி நமது தேசிய மொழி, எனவே அனைவரும் அதனைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என பதில் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட விகாஷ், சொமேட்டோ ஊழியரின் பதிலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து Boycott zomato என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.

"சகிப்புத்தன்மை குறித்து யார் பாடம் எடுப்பது?” : Zomato நிறுவனரின் ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை!

இந்நிலையில், இச்சம்பவத்துக்கு சொமேட்டோ நிறுவனம் வருத்தம் தெரிவித்து தமிழில் விளக்கம் அளித்தது.

அதில், "வணக்கம் தமிழ்நாடு, எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்க் கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரைப் பணி நீக்கம் செய்துள்ளோம். பணி நீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும், மக்களின் உணர்வுகளுக்கு எதிராகக் கருத்தைப் பகிரக்கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.

உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புகார் அளித்த விகாஷ், பணிநீக்கம் செய்யப்பட்ட அந்நபரை மீண்டும் பணியில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு சொமேட்டோ நிறுவனத்தை வலியுறுத்தினார். “தமிழர்களின் மரபு சுயமரியாதையே தவிர பழிவாங்குதல் அல்ல.” எனவும் அவர் தெரிவித்தார். விகாஷின் இந்தப் பதிவு வரவேற்பைப் பெற்றது.

இதற்கிடையே, சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் இந்த விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். சகிப்புத்தன்மை வேண்டும் என்கிற ரீதியில் அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வு குறித்து ட்வீட் செய்துள்ள சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல், “உணவு விநியோக நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்திலிருந்து யாரோ அறியாத ஒருவர் செய்த தவறு தேசிய பிரச்சனையாக மாறியிருக்கிறது. நாட்டின் சகிப்புத்தன்மை தற்போது இருப்பதைவிட கூடுதலாக இருக்க வேண்டும்.

யாரை குறை கூறுவது? அந்த பணியாளரை நாங்கள் மீண்டும் பணியமர்த்துவோம். இந்த ஒரு காரணத்திற்காக அவரை பணியிலிருந்து விடுவிப்பது ஏற்புடையதல்ல. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறிச் செல்ல அவருக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள். இப்போதுதான் அவர்கள் கற்றுக்கொண்டு தமது வேலையை தொடங்கியிருக்கிறார்கள். பிராந்திய மக்களின் உணர்வுகளையும், மொழியின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளும் அளவிற்கு யாரும் நிபுணர்கள் அல்ல. நானும்தான்.

நாம் மற்றவருடைய குறைகளை பொறுத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களுடைய மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சொமேட்டோ நிறுவனரின் இந்த ட்வீட்டில் பலரும் கடுமையாக விவாதித்து வருகின்றனர். தமிழர்களின் மீது மற்ற மொழியைத் திணிப்பது தேசிய பிரச்சனைதான் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories