தூத்துக்குடி மாவட்டம், நீராவிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நீராவி முருகன். ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இவரை போலிஸார் தேடிவந்தனர்.
இந்நிலையில் நெல்லையில் தலைமறைவாக இருந்த ரவுடி நீராவி முருகனை போலிஸார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் மூன்று போலிஸாரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் போலிஸார் அவரை என்கவுன்டர் செய்துள்ளனர்.
போலிஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட நீராவி முருகன் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு முதலில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சங்கர் என்ற ரவுடியுடன் நெருக்கம் ஏற்பட்டதை அடுத்து வழிப்பறியுடன் சேர்ந்து கொள்ளை, கொலை சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
1998ம் ஆண்டு தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே திருடிய நகையில் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் செல்வராஜ் என்பவரை கொலை செய்துள்ளார். இதையடுத்து இவருக்குத் தாதாக்கள் வட்டத்தில் செல்வாக்கு உயர்ந்துள்ளது.
2011ம் ஆண்டு முதல் தமிழ்நாடு முழுவதும் நீராவி முருகன் வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் போலிஸார் அவரை தீவிரமாகத் தேடிவந்தனர்.
மேலும் வழிப்பறி கொள்ளையில் போலிஸாரிடம் சிக்காமல் இருக்கத் தடையங்களே இருக்காத வகையில் திருடுவதில் கைதேர்ந்தவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில்தான் போலிஸார் அவரை என்கவுன்டர் செய்துள்ளனர்.