எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்து புரிதலின்றி அண்ணாமலை விமர்சித்துள்ளார் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்பாக அதன் முழு விபரங்களையும் தெரிந்துகொள்வது அவசியம். எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் குறித்து புரிதலின்றி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய பணிகள் கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியின்போது இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மின் திட்டத்திற்கான வைப்புத்தொகை 3% என குறிப்பிட்டு ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியது.
அண்ணாமலை கூறிய புகாரை நிரூபிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பி.ஜி.ஆர் நிறுவனத்துடன் கடந்த 2019-ல் அ.தி.மு.க ஆட்சியில் தான் ஒப்பந்தம் போடப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி, தங்கமணி ஆகியோரிடம் கேட்கவேண்டிய கேள்விகளை அண்ணாமலை தற்போது முன்வைத்துள்ளார். நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டபோது கூட தமிழகத்தில் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.