அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய 58 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியனர்.
மேலும் கணக்கில் வராத ரூ. 13 லட்சம், 2 கோடி வைப்புத்தொகை ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவற்றை போலிஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக இன்று காலையிலிருந்தே எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குறிப்பாகச் சென்னையில் மட்டும் 8 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த காலத்தில் ரூ.58.23 கோடிக்கு அதிகமாகச் சொத்துக்களை சேர்த்திருப்பதாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில்தான் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.