தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்களுக்கான 3 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அப்போது அவர் ஆற்றிய தொடக்க உரையின் விவரம் வருமாறு:-
”மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டங்கள் குறித்து கள நிலவரத்தை விரிவாக எடுத்துரைக்க வேண்டும். இந்த அரசினுடைய திட்டங்களை மக்களுக்கு சென்றடைகிறதா என்பது உறுதி செய்வது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துகளை அதில் இணைத்து தெரிவிக்க வேண்டும்.
எங்களுக்கும் உங்களுக்கும் அதாவது அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. ஆகவே ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைய முடியும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்ற வேண்டிய சிறப்பு திட்டங்கள் குறித்து நீங்கள் கூறலாம். நேர்மையான நிர்வாகம் வெளிப்படையான நிர்வாகம் என்பதை மனதில் வைத்து உங்களுடைய ஆலோசனையை சுதந்திரமாக கூறலாம். அந்த வகையில் உங்களுடைய கருத்துக்களை கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.