சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியைக் காதலித்ததால், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 11 பேர் திட்டமிட்டு கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று நீதிபதி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். மறுநாள், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக பிணமாகக் கிடந்தார் கோகுல்ராஜ். மேலும் உடலில் காயங்களுடன், அவரின் நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.
பின்னர், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் சாதி ஆணவப் படுகொலையான இதை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி.விஷ்ணுப்ரியா, திடீரென தற்கொலை செய்தது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதன்பின் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்ட் 30-ஆம் தேதி விசாரணை ஆரம்பமாகியது. அரசு வழக்கறிஞராக சேலத்தைச் சேர்ந்த கருணாநிதியும், யுவராஜ் தரப்பு வழக்கறிஞராக மதுரை ஜி.கே. என்ற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜுவும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வந்தனர்.
இந்த வழக்கில், மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமான சாட்சி, கோகுல்ராஜின் காதலியான சுவாதியும் சேர்க்கப்பட்டார். இவரும் கோகுல்ராஜும் திருச்செங்கோடு கோவில் மலையடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்த போதுதான், யுவராஜ் மற்றும் அவரது ஆட்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் கோகுல்ராஜ்.
இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் இதை சாட்சியாக சொன்ன சுவாதி, வாழ்க்கைப் போக்கை நினைத்தாரோ என்னவோ, திடீரென பிறழ் சாட்சியானார். இதேபோல் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி, வழக்கின் போக்கையே மாற்றின.
அரசு வழக்கறிஞரான கருணாநிதியின் போக்குதான் இதற்குக் காரணம் என மனம் வெதும்பிய கோகுல்ராஜின் தாய் சித்ரா, அரசு தரப்பு வழக்கறிஞராக, சீனியர் வழக்கறிஞர் ப.பா.மோகனை நியமிக்க வேண்டும் என அப்போதைய நாமக்கல் ஆட்சியர் ஆசியா மரியத்திடம், சந்தியூர் வழக்கறிஞர் பார்த்திபன் மூலமாக மனு கொடுத்தார். அந்த மனு கிடப்பில் போடப்பட்டதால், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சித்ரா.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கருணாநிதியை விடுவித்துவிட்டு, அரசு வழக்கறிஞராக ப.பா.மோகனை நியமித்து உத்தரவிட்டது. இதை தமிழக உள்துறைச் செயலாளரும் அரசாணை மூலம் உறுதிப்படுத்தினார். இந்த உத்தரவு வந்தபோது நாமக்கல் நீதிமன்றத்தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டிருந்தது.
2019 மே 5-ஆம் தேதி முதல் இந்த வழக்கு, மதுரை எஸ்.சி/எஸ்.டி. சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே சமீபத்தில் திடீர் திருப்பமாக அரசு தரப்புக்கு வலுவான சாட்சிகள் கிடைத்தன. வழக்கின் நிலை குறித்து அரசு வழக்கறிஞர் ப.பா.மோகனிடம் கேட்ட போது, “தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன்படி செல்போன் உரையாடல், சிசிடிவி பதிவுகள் இவற்றை ஒரு வழக்கில் ஆதாரங்களாக சேர்க்கும்போது ஆவண சாட்சியமாக குறியீடு செய்ய வேண்டும்.
ஆனால், போலிஸோ, திருச்செங்கோடு மலையில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராவை மெட்டீரியல் ஆப்ஜெக்ட் என்று குறிப்பிட்டுள்ளனர். இதை அரசு தரப்பு கவனிக்காமல் விட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதை சிறப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதால், கோகுல்ராஜ் யாரென்றே தெரியாது என முதலில் சொன்ன மதன்குமார், கடந்த நவ 27-ஆம் தேதி நடந்த விசாரணையில் உண்மையைச் சொல்லிவிட்டார். அதுவும் கோவில் உதவி ஆணையர் சூரிய நாராயணனின் சாட்சியத்திற்குப் பிறகு, இதனை இந்த வழக்கின் முக்கிய திருப்புமுனையாக மாறியது.
இந்நிலையில், இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் கடந்த 5ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் கடந்த 5ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை வழங்கி மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், யுவராஜின் டிரைவர் அருணுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனையும் மற்றும் குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித் செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு மற்றும் கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 வருட கடுங்காவல் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.