நகை கடையில் தங்கம், வெள்ளி, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், நாக்பூரில் வைத்து, ஓடும் ரயிலில் பீகாரை சேர்ந்த, நான்கு பேரை போலிஸார் பிடித்தனர். திருப்பூர் மாவட்டம் புது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயகுமார் (45). இவர் கே.பி.என்., காலனி 3வது வீதியில் நகை கடை மற்றும் அடகு கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி இரவு கதவு உடைக்கப்பட்டு, 3.25 கிலோ தங்க நகை, 28 கிலோ வெள்ளி, 14.5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து வடக்கு காவலர் நிலைய போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.
அந்தவிசாரணையின் போது, கடை அமைந்துள்ள இடம், சுற்று வட்டாரத்திலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, நான்கு பேர் சந்தேகத்துக்கு இடமான வகையில், திருப்பூரில் இருந்து ரயில் மூலமாக தப்பியது தெரிந்தது. தொடர் விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ஓடும் ரயிலில் வைத்து, நான்கு பேரை ரயில்வே போலிஸார் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக காவலர் ஒருவர் கூறுகையில், “தனிப்படையினர் உஷார்படுத்தப்பட்டு, சேலம், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னையில் ரயில்வே ஆர்.பி.எப்., போலிஸார் உதவியோடு கண்காணித்ததில், பீகார் செல்லும் ரயிலில், நான்கு பேர் செல்வது தெரிந்தது.
அதன்பின், ஆர்.பி.எப்., போலிஸ் மூலம், நாக்பூரில் ஓடும் ரயிலில் பயணித்த, நான்கு பேரையும் போலிஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து, 3.25 கிலோ தங்க நகை, 28 கிலோ வெள்ளி, 14.5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது. நாக்பூரில் கோர்ட்டில், நால்வரும் ஆஜர்படுத்தப்பட்டு, திருப்பூருக்கு அழைத்து வரப்பட உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.