செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல் நாத் கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அரவது ஃபேஸ்புக்கில் இருந்து நண்பர்களிடம் பண உதவி கேட்பது போன்ற மெசேஜ் வந்துள்ளது.
இதைப்பார்த்த அவரது நண்பர்கள் உடனே இது குறித்து அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து காவல்துறையிடம் தெரிவித்தார். உடனே சைபர் கிரைம் போலிஸார் அவரது பெயரில் உள்ள ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், மர்ம நபர்கள் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலியாக ஃபேஸ்புக் கணக்கு துவங்கி அதில் உள்ளவர்களிடம் பண உதவி கேட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த முகரியின் ipயைக் கொண்டு எங்கிருந்து இது செயல்படுத்தப்படுகிறது என தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள மர்ம நபர்தான் இந்த செயலில் ஈடுபட்டதை போலிஸார் கண்டுபிடித்தனர். பின்னர் தனிப்படை போலிஸார் ராஜஸ்தான் சென்று விசாரணை செய்தபோது 10ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தான் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கணக்கு துவங்கி மோசடியில் ஈடுபட முயன்றது தெரிந்தது.
பின்னர் போலிஸார் சிறுவனை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பிறகு செங்கல்பட்டு அழைத்துவந்தனர். இதையடுத்து சிறுவனைக் கைது செய்த போலிஸார் கூர்நோக்கு இல்ல பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பிவைத்தனர். சைபர் குற்றவாளியைக் கைது செய்த போலிசார்ருக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.