தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முதலாக பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சியமைத்த நாள் (06-03-1967) இன்று.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவிலேயே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த மாநில கட்சி என்ற பெருமையும் பேரறிஞர் அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கே சேரும்.
சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்த காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை, எழுத்தராக தொடங்கிய அவரது வாழ்க்கையை பி.ஏ., எம்.ஏ. என்ற பட்டதாரியாகவும், கல்லூரி ஆசிரியராகவும் , இந்தி திணிப்பை எதிர்த்த போராளி என நீண்டது.
தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கையால் ஈர்க்கப்பட்ட பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவி தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக நுழைந்து பின்னாளில் அதே சட்டமன்றத்தில் “தமிழ் நிலத்தை தி.மு.க. என்றும் காக்கும்” என்று முழக்கமிட்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் இன்று.
பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க அரசு செய்த சாதனைகள் சிலவற்றை நாம் இங்கே பார்ப்போம்:-
1967-ல் பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார். தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் என அரசாணையை கொண்டுவந்தார்.
தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.
அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது. ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை, கோவை இரு நகரங்களிலும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கியது.
புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்யப்பட்டது.பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது. ஏழைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு - பி.யு.சி வரையில்.
பேரறிஞர் அண்ணாவின் உத்தரவால் தான் இன்றுவரை அரசு பேருந்துகளில் திருக்குறள் இடம்பெறு வருகிறது.கலப்பு மணம் செய்துகொள்வோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் தங்க விருது அளிக்கப்பட்டது. சென்னையில் உள்ள குடிசை வாசிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள் கட்டித் தந்தார்.
கட்சி தொடங்கப்பட்டது முதல் என்னென்ன கோரிக்கைகளை எல்லாம் திமுக வலியுறுத்திவந்ததோ, அவற்றையெல்லாம் தனது முதல் ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்றி காட்டியவர் பேரறிஞர் அண்ணா. இன்றுவரை கழகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறார் பேரறிஞர் அண்ணா.